உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 02, 2010

வலைகளில் இருந்து தப்பிய வயல்வெளி பறவை நண்பர்கள் !

கடலூரை அடுத்த செம்மங்குப்பம் அருகே உழவு நடைபெறும் வயலில், பூச்சிகளைத் திண்பதற்காக சூழ்ந்து கொண்ட கொக்குக் கூட்டம்.
கடலூர்:

                 பயிர்களைக் காப்பாற்ற ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவதால், இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு மீண்டும் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

                பூமியில் உயிரினங்கள் அனைத்தும், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவைகளாகவே உள்ளன. இந்தச் சங்கிலித் தொடரில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால், அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.÷நெல் பயிரில் ஏதேனும் சிறு அளவில் பூச்சி தோன்றினாலே, நமது விவசாயிகள் வயல் முழுமைக்கும் வலுவான ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்து விடுகிறார்கள். 

                  இதனால் சம்மந்தப்பட்ட பூச்சிகள் அழியும் அதே நேரத்தில் பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. தொடர்ந்து பூச்சிக் கொல்லி மருந்துடனும், ரசாயன உரங்களுடனும் வாழவேண்டிய நிலை பயிர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை உண்டு வாழ்பவை கொக்கு, மடாயான், நாரை போன்ற பறவைகள். நெல் வயல்களில் உழவு ஆரம்பித்த உடனேயே கொக்கு உள்ளிட்ட பறவைகள் வயல்வெளிகளைச் சூழ்ந்து கொள்ளும்.

                 காற்றில் ஈரப்பதம் அதிமாகும்போது, உருவாகும் படைப்புழு, அந்துப் பூச்சிகள், இலை சுருட்டுப்புழு, குருத்துப் பூச்சி உள்ளிட்ட பூச்சிப் புழுக்களை இப்பறவைகள் கொத்திச் சாப்பிட்டு விடும். இதனால் நோய்களில் இருந்து பயிர்கள் காக்கப்படுகின்றன. சிறு அளவில் பூச்சிப் புழுக்கள் காணப்படும்போதே விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை அடித்து விடுவதால், பயிர்களுக்கு நன்மை பயக்கும் தட்டான், ஊசித் தட்டான், தரைவண்டு, பொறிவண்டு, சிலந்தி, குளவி உள்ளிட்டவற்றையும் பூச்சிக் கொல்லி மருந்துகள் அழித்து விடுகின்றன.

                பூச்சிக் கொல்லி மருந்துகள் அடித்த வயல்வெளிகளுக்கு, விவசாயிகளின் நண்பனான கொக்கு, மடாயான் உள்ளிட்ட பறவைகளும் வருவதில்லை. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் வனப்பகுதியில் ஏராளமான கொக்கு, மடாயான், நாரை உள்ளிட்ட பறவைகள் உள்ளன. இவை கடலூர் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்து இரை தேடுகின்றன. வயல்வெளி நண்பர்களாக வலம் வருகின்றன. 

               ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வயல்வெளிகளிலும், வனப் பகுதிகளிலும் நரிக் குறவர்களின் துப்பாக்கிகளுக்கும், வலைகளுக்கும் இரையாகி வந்தன. இவற்றின் இறைச்சி ஹோட்டல்களிலும், பரோட்டாக் கடைகளிலும் மக்களுக்குச் சுவையான விருந்தாகி வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் கொக்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டு வருகிறது. கொக்குகளை சுட்டும், பிடித்தும் அங்காடிகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லும் நரிக்குறவர்கள் பலர், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பலருக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் தற்போது கொக்கு உள்ளிட்ட பறவைகளை வயல்வெளிகளில் அதிகமாகப் பார்க்க முடிகிறது 

இது குறித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முட்லூர் விஜயகுமார் கூறுகையில், 

                 "விவசாயிகளின் நண்பர்களான கொக்கு, நாரை, மடாயான் போன்ற பறவைகள், பெருமளவுக்கு அழிக்கப்பட்டு வந்தன.÷இதுகுறித்து பல ஆண்டுகளாக விவசாயிகள் குறைகேட்கும் கூட்டங்களில், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.÷இதனால் கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிக அளவில் சுதந்திரமாக வயல்வெளிகளைச் சுற்றி வருகின்றன.

                வயல்களில் பூச்சித் தொல்லை குறைந்து வருகிறது. வயல்வெளிகளில் பயிர்களில் அமர்ந்து, அந்துப் பூச்சிகள் உள்ளிட்டவற்றைக் கொத்தித் தின்னும் கொக்கின் அழகு அலாதியானது.  விவசாயம் செழிக்க பறவை இனங்கள் காப்பாற்றப்பட வேண்டும்."

பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதில்லை

                     நான் 10 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாக ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியது இல்லை. லேசான பூச்சித் தாக்குதல் தெரிந்தால், நொச்சி, ஆடாதோடா, பீச்சலாத்தி, வேம்பு இலைகளை பறித்து வந்து, தண்ணீர் விட்டு அவித்து, அவற்றை அந்த நீருடன் சேர்த்து அரைத்து, தெளிப்பான் மூலம் தெளித்து விடுவேன். இது அற்புதமான இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து. இதனால் எனது வயலில் பூச்சிகள் அண்டுவது இல்லை' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior