உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது : 200 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது

கடலூர் : 

                கடந்த 26ம் தேதி பெய்த பேய் மழையால் பெருக்கெடுத்த மழை நீர் வடிவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

                இடைவிடாது பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய போதிலும் கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது லேசாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் வங்கக் கடலில் ஏற்பட்ட "ஜல்' புயல் காரணமாக இரண்டு நாள் கனமழை பெய்தது.

                  அதன்பிறகு எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 23ம் தேதி இரவு முதல் மழை பெய்யத் துவங்கியது. பரவலாக மிதமாக பெய்து வந்த மழை கடந்த 26ம் தேதி தீவிரமடைந்தது. ஒரே நாளில் மாவட்டத்தில் சராசரியாக 200 மி.மீ., அளவு மழை கொட்டியது.

                    இதற்கிடையே மாவட்டத்தின் நீர் ஆதார பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கன மழை பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் பெருக்கெடுத்ததால் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான பெண்ணையாறு, கெடிலம், மணிமுக்தா, வெள்ளாறு, பரவனாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மாவட்டமே வெள்ளக்காடானது. 

                     குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தேரி மற்றும் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தில் வெள்ளாற்று கரை உடைந்ததால் 8 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. விருத்தாசலத்தில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் விருத்தாசலம் - சேலம், விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை, அரியலூர் மாவட்டம் செங்கால் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் காட்டுமன்னார்கோவில் - திருச்சி, வடலூர் - சேத்தியாத்தோப்பு சாலை போக்குவரத்து தடைபட்டது.

                    அதேப்போன்று வடிகால்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் கடலூர் முதுநகர், வண்டிப்பாளையம், குழந்தை நகர், தானம் நகர், நவநீதன் நகர், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், ராமநாதன் நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாக்களில் பல கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. முகத்துவாரம் தூர்ந்து போனதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வடிவதில் தாமதமானது. மாவட்டத்தின் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

                    27ம் தேதி பகல் 12 மணிக்கு மேல் மழை விட்டது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வடிகால் வாய்க்கால்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரியதால் மூன்று நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மழை நீர் வடிந்தது. மேலும் பெரும்பாலான இடங்களில் மோட்டார் மூலமும் நீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்றதால் நீர் நிலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்ததால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மெல்ல, மெல்ல குறைந்து வந்தது. 

                 இன்னும் இரண்டு நாள் மழை விட்டால் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் வங்கக் கடலில் மீண்டும் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் துவங்கியது. இரவு 8 மணிக்கு மேல் தீவிரமடைந்த மழை விடிய, விடிய கொட்டியது.

நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விவரம்: 

பரங்கிப்பேட்டையில் 185, 
புவனகிரி 102, 
சிதம்பரம் 93, 
கொத்தவாச்சேரி 87, அ
ண்ணாமலை நகர் 86.80,
கடலூர் 84,
சேத்தியாத்தோப்பு 76,
வானமாதேவி 68.30,
பெலாந்துறை 64,
காட்டுமன்னார்கோவில் 62,
லக்கூர் 48,
லால்பேட்டை 44,
பண்ருட்டி 40,
விருத்தாசலம் 38.20,
மேமாத்தூர் 38,
குப்பநத்தம் 33.20,
கீழ்ச்செருவாய் 30,
ஸ்ரீமுஷ்ணம் 30,
தொழுதூர் 20,
காட்டுமயிலூர் 20,
வேப்பூர் 16 மி.மீ.,

              மழை பெய்துள்ளது.

                 மாவட்டத்தின் வடிகால் பகுதியான பரங்கிப்பேட்டை, புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கடந்த 26ம் தேதி பெய்த மழை நீர் முற்றிலுமாக வடியாத நிலையில், நேற்று முன்தினம் ஒரே இரவில் பெய்த கன மழை காரணமாக மேற்கண்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

                    இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து கனமழை கொட்டியதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீட்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior