விருத்தாசலம் :
விருத்தாசலம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது மழை பெய்ததால், பஸ் நிலையம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் முக்கிய வடிகாலாக 3.5 மீட்டர் அகலம் கொண்ட ஆலடிரோடு ஊத்து ஓடை வழியாக சின்னகண்டியங்குப்பம், எம்.ஆர்.கே., நகர், ஆலடி ரோடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகர் பகுதியின் மழை தண்ணீர் வெளியேறும்.
இந்த ஓடை தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, ஒரு அடி அகலம் கொண்ட சிறிய கால்வாயாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் இப்பகுதியிலிருந்து வெளியேறும் தண்ணீர் உள்வாங்காமல் தெருக்களில் வழிந்தோடுகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விருத்தாசலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இடை விடாது பெய்த மழையால், விருத்தாசலம் எம்.ஆர்.கே., நகரில் உள்ள ஏரியும், சின்னகண்டியங்குப்பத்தில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது.
களுங்கு வழியாக, வெளியேறிய வெள்ளம் வடிகால் வசதி இல்லாததால் எம்.ஆர்.கே., நகர், கருணாநிதி நகர் ஆகிய நகர்களின் தெருக்களின் வழியே ஓடி பஸ் நிலையத்திற்குள் புகுந்து வெள்ளக்காடானது. இதனால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக