(விருத்தாசலம்) நீர்வள, நிலவளத் திட்டத்தின்கீழ் விழுப்புரம் மாவட்டம் தச்சூரில் "ராஜராஜன் 1000' நெல் சாகுபடி முறையை பயன்படுத்தியுள்ள விவசாயிகள்.
விருத்தாசலம்:
கோமுகி அணை பாசன விவசாயிகள் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். மேலும் இம்முறையை ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது.
இம்முறை குறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் அருட்செந்தில் தெரிவித்தது:
தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகை பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தும் வகையில் உலக வங்கி உதவியுடன், தமிழ்நாடு அரசு நீர்வள, நிலவளத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இம்முறையின் மூலம் விழுப்புரம், கடலூர் மற்றும் சேலம் மாவட்டப் பகுதிகளில் கோமுகி அணை பாசனப் பகுதிகளில் ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையை விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு களைக்கருவி, நடவு அடையாளக் கருவி, உரங்கள் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
ராஜராஜன் 1000 நெல் சாகுபடி முறையில் 1 ஏக்கருக்கு நாற்றங்கால் 40 ச.மீ. அளவும், 3 கிலோ விதையும் போதுமானது. ஆனால் நடைமுறை சாகுபடிக்கு நாற்றங்காலில் அளவு 320 ச.மீ. தேவைப்படுகிறது. மேலும் விதை சுமார் 16 முதல் 24 கிலோ வரை தேவைப்படும். ராஜராஜன் 1000 முறையில் நாற்று வயது 14 முதல் 15 நாள்களாகும். எனவே விவசாயிகள் இம்முறையைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம். நடைமுறைப்படுத்த வேண்டிய நாற்றங்கால் முறை: 1 ஏக்கருக்கு மேற்கண்டபடி விதையும், அளவும் போதுமானது.
நடவு வயலின் ஓரத்தில் 1-க்கு 5 மீ. அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும். இதில் மக்கிய தொழு உரத்தை தெளிக்கலாம். நிலப்பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின் மேடைமேல் பாலித்தின் அல்லது பிரித்த உரச் சாக்குகளையோ பரப்ப வேண்டும். மீண்டும் 4 செ.மீ. உயரத்துக்கு மண்ணை நிரப்ப வேண்டும். விதைநேர்த்தி செய்ய 1 கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் மற்றும் அசோபாஸ் உயிர் உரம் 3 கிலோ விதைக்கு 1 பாக்கெட் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். சூடோமோனாஸ் மற்றும் அசோபாஸ் ஆகியவற்றை தேவையான அளவு அரிசிக்கஞ்சி அல்லது தண்ணீரில் கரைத்து பின் அவற்றை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்த வேண்டும்.
உலர்த்திய விதைகளை தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பின் முளைகட்ட வேண்டும். முளைகட்டிய பின் ஒவ்வொரு 5 ச.மீ. மேடையிலும் 375 கிராம் விதையை பரவலாக விதைக்க வேண்டும். பின்னர் பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்கலாம் அல்லது சுற்றியிருக்கும் பள்ளங்களில் தண்ணீர் நிரப்பலாம். இதைத் தொடர்ந்து முளைத்த நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து வயலுக்கு எடுத்துச் செல்வது சிறப்பானதாகும்.
இதனால் நாற்றுகளின் வேர்ச் சூழ்நிலை மாறாமல் நடப்பட வாய்ப்பிருப்பதால், செடிகள் பச்சை பிடிப்பது உடனடியாகத் தொடங்கும். நாற்றுகளை மண்ணோடு பத்தையாக எடுத்து முறம் அல்லது அட்டைப் பெட்டியில் வைத்து, நடவு இடத்தில் நடும்போது நாற்றுகளை பிரித்து நடலாம். ÷இம்முறையில் 25-க்கு 25 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும். இதில் அடையாளமிட்ட கயிறையோ அல்லது நடவு அடையாளக் கருவியையோ பயன்படுத்தலாம். 1 குத்துக்கு 1 நாற்று என்ற விகிதம் முடிந்த அளவுக்கு வேர்கள் மேல் நேக்காமலும், ஆழமாக இல்லாமலும் நடுவது நல்லது.
இம்முறையில் பெரும்பாலும் இயற்கை உரங்கள் மற்றும் உயிர் உரங்களை ரசாயன உரங்களோடு பயன்படுத்துவது மட்டுமல்லாமல், பயிருக்குத் தேவைப்படும் காலகட்டங்களில் அவற்றைப் பிரித்து இடவேண்டும். மேலும் இம்முறையை பயன்படுத்துவதால் ஆள் செலவு குறைகிறது. வயலில் நீரைத் தேக்க வேண்டிய அவசியமில்லை. அதிக தூர்கள் வரும். இதனால் அதிக கதிர்கள் மற்றும் மணிகள் உண்டாகும். இதனால் அதிக லாபம் பெறலாம் என அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல்களை கோமுகி நீர்பாசன விவசாயிகள் சங்கங்கள் மூலமாக தொடர்பு கொண்டு பெறலாம் எனவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக