
ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசுகிறார் சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கே.ராஜேந்திரன்
சிதம்பரம்:
சிதம்பரத்தில் வியாழக்கிழமை ரயில் மறியல் செய்ய வந்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர்.
பல்கலைக்கழகத்துக்கு வந்து செல்லும் நேரத்துக்கு ரயில்களின் நேரத்தை மாற்றி அமைக்குமாறும், ஏற்கெனவே மீட்டர் கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் என கோரி அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் இ.சந்தோஷ்குமார் தலைமையில் 800 பேர் வியாழக்கிழமை விழுப்புரம்-மயிலாடுதுறை ரயிலை மறிக்க வந்தனர். அவர்களை ரயில்வே போலீசார் மற்றும் சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீஸôர் ரயில் மறியல் செய்ய தடுத்ததால் பிளாட்பாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி தேசியக் குழு உறுப்பினரும், சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவருமான வழக்கறிஞர் கே.ராஜேந்திரன், பாஜக நிர்வாகிகள் வே.ராஜரத்தினம், இரா.திருமேணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட மாணவரணிச் செயலர் கெய்க்வாட்பாபு உள்ளிட்டோர் பேசினர். பின்னர் சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.இந்துமதி, ரயில்வே நிலைய மேலாளர் பட்டாபிராமன், ரயில்வே டி.எஸ்.பி. மாணிக்கம், சிதம்பரம் டி.எஸ்.பி. ஆர்.மோகன், வட்டாட்சியர் எம்.காமராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவித்து இரண்டு மாதங்களில் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால், மாணவர்கள் தாற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக