உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, ஜனவரி 28, 2011

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.50 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தருவிப்பு

கடலூர்:

             சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 1.5 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுத்துவரப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். கடலூர் மாவட்ட தேர்தல் ஏற்பாடுகளை வியாழக்கிழமை பிரவீண்குமார் ஆய்வு செய்தார். 

பின்னர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்  பேசியது:

             கடலூர் மாவட்டத் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். தேர்தல் பணிகள் திருப்திகரமாக நடைபெற்று உள்ளன. தமிழகத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்பு தருவிக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வாக்குப் பதிவின் நேரம் பதிவாகாது.எனவே வாக்குப் பதிவு நேரம் பதிவாகும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் 1.5 லட்சம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

              கடலூர் மாவட்டத்துக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் அரசு கருவூலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்தேன்.வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதிய வாக்குப் பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் 1,000 வாக்குகள் பதிவு செய்து, காண்பிக்க இருக்கிறோம்.10 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் இந்த வாக்குப் பதிவு, செய்து காண்பிக்கப்படும். 

            வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 கட்டமாக சோதனை செய்யப்படும். மின்னணு இயந்திரங்களில் பயிற்சி அளிக்க, முதல் கட்டமாக மாஸ்டர் டிரெய்னர்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பாளர்கள்.தமிழகத்தில் 11.46 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புதிதாக 49,976 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போதைய சட்ட மன்றத்தின் ஆயுள் காலம் மே 13-ம் தேதி வரை உள்ளது.மே 10-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். முந்தைய தேர்தல்களில் மார்ச் 1-ம் தேதி, தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

               தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதுபற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும்.தேர்தல் ஆணைய விதிகளின்படி, அரசுப் பணிகளில் 3 ஆண்டுகள் ஓரிடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கிக் கணக்கு தொடங்கி, அதன் மூலம் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். செய்தித்தாள்களில் வேட்பாளர் பற்றி கட்டுரைகள் எழுதப்பட்டால், அது விளம்பரமாகக் கருதப்பட்டு, அதற்கான தொகை வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்றார் பிரவீண்குமார் .மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior