நெய்வேலியில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்ததுடன், மத்திய தேர்தல் பார்வையாளர்களும் வந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்தநிலையில், சி.பி.ஐ. அதிகாரிகளின் வருகை அங்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று காலை 10.30 மணிக்கு 3 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 22 நபர்களை கொண்ட சி.பி.ஐ. குழுவினர் ரகசிய தகவலின் பேரில் நெய்வேலிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் ஒரு செயல் இயக்குநர் மற்றும் ஒரு பொது மேலாளர் அலுவலகங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள நெய்வேலி நிலக்கிரி நிறுவன காண்டிராக்டர் ஒருவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பிற்பகலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த சோதனை இரவு விடிய, விடிய நீடித்தது. என்.எல்.சி. வரலாற்றில் அதிக நபர்களை கொண்ட சி.பி.ஐ.குழு விசாரணை நடத்தியது இதுவே முதல்முறையாகும். இந்த திடீர் சோதனையால் என்.எல்.சி. உயர்அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்.எல்.சி. அதிகாரிகள் மீதான புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சோதனை விடிய விடிய நேற்று நடந்ததாகவும் சோதனை முடிந்த பிறகுதான் இதுபற்றிய விவரங்களை சொல்லமுடியும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக