உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. செல்வாக்கு - ஒரு அலசல்

கடலூர்:
             கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்று, அக்கட்சியின் முதல் பிரதிநிதியாக சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப் பட்டார்.  
             விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என்ற மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் அவரை அடுத்து வந்த பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமியை விட 13,777 வாக்குகள் அதிகம் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடத்தைப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் காசிநாதன் 35,876 வாக்குகளைப் பெற்றார்.  
                இந்தத் தொகுதியில் பா.ம.க.வில் வேறு வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருந்தாலோ, தி.மு.க.வுக்கு ஒதுக்கி இருந்தாலோ விஜயகாந்த் வெற்றி பெற்று இருக்க முடியாது என்று அப்போது கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். எனவே இந்தத் தேர்தலிலும் மும்முனைப்போட்டி உறுதியாகி விட்டது.  

                கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் 61,337 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எம்.சி. தாமோரன் 13,914 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். இதில் இருந்து பார்க்கும்போது விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. செல்வாக்கு வளர்ந்து இருப்பதாகக் கணக்கில் கொள்ள முடியாது.  
              கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட்டது. பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற 30,133 வாக்குகள் உள்பட கடந்த தேர்தலில் கடலூர் மாவட்டம் முழுவதிலும் தே.மு.தி.க. 1,41,574 வாக்குகள் பெற்றுள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 8 சதவீதம் ஆகும்.  கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற தே.மு.தி.க.வுக்கு, இந்தத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
                 கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவே விஜயகாந்த் சார்ந்துள்ள அ.தி.மு.க. கூட்டணி கருதுகிறது.  தனித்து கடலூர் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு பெற்ற வாக்குளைவிட, கூட்டணியில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்குமா அல்லது அது அ.தி.மு.க. கூட்டணிக்குக் கைகொடுக்குமா? தனித்துப் போட்டியிடுவதைவிட, கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்குகள் குறையுமா கூடுமா என்பதை வர இருக்கும் தேர்தல்தான் தீர்மானிக்கும்.  
                       எனினும் தே.மு.தி.க. ஒரு கூட்டணியில் சேர்ந்து விட்டதால் தனிப்பட்ட முறையில் அந்தக் கட்சி பெறும் வாக்குகளைத் தீர்மானிக்க முடியாது. அது அந்தக் கூட்டணியின் வெற்றி தோல்வியைப் பொறுத்ததாகவே அமையும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior