உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

கடலூர் மாவட்டத்தில்முந்திரி மகசூல் அமோகம்


கடலூர் அருகே ராமாபுரத்தில் பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும் முந்திரி.
 
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் தற்போது முந்திரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கும் நிலை, பார்ப்போர் கண்களுக்கு இதமாகவும், விவசாயிகள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் விதமாகவும் உள்ளது.  கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. பண்ருட்டி பகுதியில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கரில் முந்திரி பயிரிடப்பட்டு உள்ளது.  ஒரு காலத்தில் முழுவதும் மானாவாரிப் பயிராக இருந்த முந்திரி சாகுபடி இன்று, இறவைப் பயிராகவும், பல்வேறு உயர் விளைச்சல் தரும் ஒட்டு ரகங்களை பயிரிட்டு மகசூலை அதிகரிக்கும் வணிகப் பயிராகவும் மாறியிருக்கிறது.  

                 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்திரி மரங்கள் பூக்கத் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் அறுவடை தொடங்கி, ஜூன் முதல் வாரத்தில் அறுவடை முடிந்து விடும்.  மே மாதத்தில் அறுவடை உச்ச நிலையில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மழை இருந்தால் முந்திரி மரங்கள் பூப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாததால், தற்போது எங்கு பார்த்தாலும் முந்திரி மரங்கள் பூவும் பிஞ்சுமாகக் காட்சி அளிப்பது மனதுக்கு ரம்மியமான தோற்றம்.  

                விவசாயிகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு முந்திரி மகசூல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு அறுவடை தொடங்கும் நேரத்தில் பெய்த மழையால் முந்திரி மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.  விளைந்த முந்திரிக் கொட்டைகள், மரங்களின் அருகே தேங்கிய நீரில் விழுந்து, முந்திரிக் கொட்டையின் தரத்தை சேதப்படுத்திய நிலை இருந்தது.  முந்திரி பூக்கும் காலத்தில் அதிகமாக பனி பெய்தால், பூங்சாணம் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் பெருமளவு பாதிக்கும். 

           ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் இல்லாததால், முந்திரி மரங்கள் பாதிப்பில் இருந்து தப்பியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் மானாவாரி முந்திரி மகசூல் ஏக்கருக்கு 4 முதல் 5 மூட்டைகள் (80 கிலோ) வரையிலும், இறவை மற்றும் ஒட்டுரக முந்திரியில் மகசூல் அதிகம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.  எனவே இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் முந்திரிக் கொட்டை கிடைக்கும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.  

இது குறித்து வேளாண் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறுகையில்,

              "கடந்த ஆண்டைக் காட்டிலும், இவ்வாண்டு முந்திரி மரங்கள் வளமாகப் பூத்து இருக்கின்றன. இதுவரை பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் இன்றி நன்றாக உள்ளன. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கடலூர் மாவட்டத்தில் முந்திரி மகசூல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முந்திரிக் கொட்டை விலை தற்போது மூட்டை ரூ. 7 ஆயிரமாக உள்ளது.  முந்திரி ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அரசு நிதி உதவி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் காட்டாண்டிக்குப்பத்தில், முந்திரி ஏற்றுமதி மையம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.  

           இங்கு முந்திரிக் கொட்டைகளை உடைத்து பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகள்  உள்ளன.  ÷கொட்டையை உடைத்து பதப்படுத்தும் தொழில் கடலூர் மாவட்டக் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது என்றார்.  

பத்திரக்கோட்டை விவசாயி தேவராசு கூறுகையில் 

               "முந்திரி விவசாயத்தில் போதிய லாபம் இல்லை. தற்போது செலவு அதிகம். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் செலவு.  ÷மகசூல் வரவு ரூ. 20 ஆயிரம்தான். வேலைக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. வெளி மாநிலத்தினர் வந்து இங்கு முந்திரி பதப்படுத்தும் தொழில் செய்வதால், முந்திரி ஏற்றுமதி மையமும் சரியாக செயல்படவில்லை'  என்றார்.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior