பண்ருட்டி :
கச்சா முந்திரி கையிருப்பு இல்லாமல், புதிய உற்பத்தி துவங்காததால் முந்திரி பயிர்கள் விலை உயர்ந்து வருகிறது. இந்திய அளவில் முந்திரி உற்பத்தி குறைந்து வருவதால் இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஐவரிகோஸ்ட், பெனில், கானா, தான்சேனியா ஆகிய நாடுகளில் இருந்து கச்சா முந்திரி இறக்குமதி செய்யப்பட்டு பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு முந்திரி ஏற்றுமதி செய்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இறக்குமதி முந்திரி கொட்டை வரத்து குறைந்தது. ஒரு ஆண்டில் 6 லட்சம் மெட்ரிக் டன் அளவில் கச்சா முந்திரி ஏற்றுமதி செய்யும், ஐவேரிகோஸ்ட்டில் அந்நாட்டு ஏற்பட்டுள்ள உள் நாட்டு கலவரம் காரணமாக, இந்தியாவிற்கு வரும் இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் போதிய அளவில் கச்சா முந்திரி கையிருப்பில் இல்லாததால் முந்திரி பயிர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போது கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தில் தேனி, கன்னியாகுமரியில் முந்திரி அறுவடை சீசன் துவங்கினாலும் தினமும் இரண்டு லாரிகள் அளவில் மட்டும் வருகிறது. ஈர முந்திரி விலை ஒரு கிலோ 80 அளவிலும், 80 கிலோ எடை கொண்ட காய்ந்த கொட்டை 7,200 ஆக நிலைத்துள்ளது. அதனால் 240 ரகம் 420ல் இருந்து 450 ரூபாயாகவும், 320 ரகம் 370ல் இருந்து 420ஆகவும், பட்ஸ் ரகம் 330ல் இருந்து 350ம், பத்தை 370ல் இருந்து 400ம், எல்.டபிள்யூபி ரகம் 320ல் இருந்து 340ம், எஸ்.டபிள்யூபி ரகம் 250ல் இருந்து 280ஆகவும், ஆவரேஜ் பயிர் 350 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. பண்ருட்டி பகுதியில் தற்போது முந்திரி உற்பத்தி சீசன் நன்றாக உள்ளதால் இன்னும் 25 நாட்களில் முந்திரி வரத்து துவங்கியதும், விலைகள் வெகுவாக குறையும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக