கிள்ளை : 
              சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில்  விடுதியில் இருந்து கல்லூரிக்கு அமைக்கப்படும் சாலையை தரமாக அமைக்க  வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
                 சிதம்பரம் அடுத்த  சி.முட்லூர்  அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  தாழ்த்தப்பட்டோர் அரசு மாணவர்கள் விடுதி இயங்கி வருகிறது. விடுதியில்  இருந்து கல்லூரிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால் மழைக் காலத்தில்  மாணவர்கள் லுங்கியுடன் சென்று கல்லூரியில் உடை மாற்றும் நிலை தொடர்ந்ததால்  பலமுறை மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் தற்போது கல்லூரி  வளாகத்தில் ஆதிதிராவிடர் விடுதியில் இருந்து முதல் கட்டமாக 100 மீட்டர்  தொலைவில் 10 அடி அகலத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 
                இரவு நேரத்தில் பொக்லைன் மூலம் சாலை அமைக்க பள்ளம் தோண்டியதால் தற்போது  பைப் லைன் துண்டிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சாலை  அமைக்கும் இடத்தை சமப்படுத்தாமல் மேடு, பள்ளங்களாக கடமைக்கென  சாலை பணி  நடப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இது குறித்து  மாணவர்கள் கேட்டதற்கு, வெகு நாட்களாக சாலை அமைக்கப்படவில்லை, தற்போது  அமைக்கப்படும் சாலையை தடுத்தால் அதிகாரிகளிடம் சொல்லி சாலை போடுவதையே  முழுமையாக நிறுத்தப்படும். 
                 அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது  கல்லூரி மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் தெரிவிப்போம்' என  மிரட்டுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தேர்தலை காரணம் காட்டி  ஒதுங்காமல் சம்மந்தப்பட்டவர்கள் நேரில் ஆய்வு செய்து தரமான சாலை அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக