உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், மார்ச் 31, 2011

தமிழகத் தேர்தல் : திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பார்வையில்

தினமலருக்கு அளித்த பேட்டி


  
தமிழர்களின் நிலையைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றனர்! 
தங்கர்பச்சான் திரைப்பட இயக்குனர்

 இயற்பெயர் : தங்கராஜ், 
வயது : 49, 
சொந்த ஊர் : பண்ருட்டி அருகில் உள்ள பத்திரக்கோட்டை, 
படிப்பு : ஒளிப்பதிவில் டிப்ளமா, 
தொழில் : விவசாயம், 
எழுத்து : நான்கு நாவல்கள், 
விருது : தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர், 
போராட்டம் : தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடத்தியவை, 
அரசியல் அனுபவம் : இல்லை


                     அரசியல் கட்சிகளின் இலவச திட்ட தேர்தல் அறிக்கைகளுக்கு எதிராக கொதித்தெழுந்து, அறிக்கை விட்டு சமீபத்திய பரபரப்புக்கு தூபம் போட்டிருக்கிறார், சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட தங்கர்பச்சான். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள வீட்டிற்கு சென்றதும், தனது கிராமத்து தோட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு அடை, வாழைப்பழம் உபசரிப்புடன் துவங்கியது சந்திப்பு.

அரசியலுக்கு வருவதற்கான அச்சாரம் தான் சமீபத்திய புது அவதாரமா?

                 கடந்த 22 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறேன். எனது பேச்சும், எண்ணமும், படைப்புகளும் ஆரம்பம் முதலே மொழி, இனம் மக்கள் சார்ந்த அக்கறையுடன் இருக்கும். ஜாதி, மதம் என்ற பெயரில், ஒவ்வொரு தமிழனின் தலையும் அரசியல் கூட்டணியிடம் அடமானம் வைக்கப்படுகிறது. மக்களை வியாபாரப் பொருளாக மாற்றியுள்ளனர். தமிழன் வீட்டில் இருந்தால் தொலைக்காட்சி, வெளியில் சென்றால் மதுக்கடை, திரையரங்கம் என அவனை சிந்திக்கவே விடுவதில்லை. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான், தேர்தல் அறிக்கைகளை விமர்சித்ததற்கான பிரதான காரணம்.

தி.மு.க., - அ.தி.மு.க., என்ற இரு பிரதான கட்சிகளுமே பூரண மதுவிலக்கு பற்றி வாய் திறக்கவில்லை. இந்நிலையில், வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

               தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளின் மீதும், பல விஷயங்களில் நன்மதிப்பு வைத்திருக்கிறேன். இரண்டு கட்சியும், வெவ்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொண்டு என்னால், "ஜால்ரா' போட முடியாது. துணிந்து சொல்கிறேன், திருவள்ளுவரை வைத்து ஏமாற்றுவதை இனி அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில், பொதுப் பிரச்னைகளுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராடினர் என்ற வரலாறே கிடையாது. மொழிப்போர் பிரச்னையைத் தான் இன்னும் சொல்லிக் கொண்டி ருக்கின்றனர். இலவசங்கள் கிடைக்கவில்லை; சம்பள உயர்வு வேண்டும் என்பது போன்ற சுய நலம் சார்ந்த போராட்டங்களில் மட்டுமே பலதரப்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளாக, நாட்டையும், மாநிலங்களையும் சில குடும்பங்கள் மட்டுமே 50 ஆண்டாக ஆள்கின்றன. அப்படி என்றால் எகிப்து, லிபியாவில் நடந்து கொண்டிருக்கும் புரட்சி, எங்கு வெடித்திருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

             பா.ஜ.,வும், தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகளும், தங்கள் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு குறித்து வாக்குறுதி அளித்துள்ளன... இந்த மூன்று கட்சிகளுமே ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தி.மு.க., வெற்றி பெற்றால், அந்தக் கட்சி மட்டும் தான் ஆளப்போகிறது. கூட்டணிக் கட்சிகள், ஒரு ஓரத்தில் வேண்டுமானால் நிற்கலாம். இவர்கள் தி.மு.க, விற்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து தான் கூட்டணியில் இடம் பிடித்துள்ளனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு குறித்து எதுவுமே சொல்லவில்லை. சொல்லப்படாத அந்த அறிக்கையில் இருப்பது என்ன வென்பது அனைவருக்குமே விளங்கும்.

பூரண மதுவிலக்கை எதற்காக அமல்படுத்த வேண்டும் என்கிறீர்கள்?

                  இன்று எடுக்கப்படும் மசாலா திரைப்படங்களும், மதுக்கடைகளும் தமிழனை மயக்கத்தில் வைக்கிற ஒரே பணியை செய்கின்றன. தமிழனுக்கென வரலாறு, கலாசாரம், திறமை இருக்கிறது. 10 கோடி பேர் உள்ள தமிழன், மதுப் பழக்கத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறான். இந்நிலையை மாற்றத் தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என, என்னைப் போன்றவர்கள் வலியுறுத்தி வருகிறோம்.

இளைஞர் முதல் முதியவர் வரை, "டாஸ்மாக்' கடையை முற்றுகையிடும் நிலையில், இதெல்லாம் சாத்தியமா?

                தமிழகத்தில் எந்தப் பெண்ணும், மது விற்பனையை ஆதரிக்கவில்லை. குடிப்பவனும், ஏதாவது காரணத்தை முன் வைத்து தான் குடிக்கிறான். மதுவிலக்கை அமல்படுத்தினால், அவனால் குடிக்க முடியாது. வாக்காளர்களில், மது குடிப்பவர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது என்பதற்காக, மதுவிலக்கை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது. "மதுவிலக்கை அமல்படுத்தினால், அந்த வெறியில் பலர் இறந்துவிடுவர்' என்கின்றனர். மது குடித்தாலும், அவன் சாகத்தான் போகிறான். அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இந்தத் திட்டத்தை அறிவிக்கும் அரசியல் கட்சியை அனைத்து தரப்பு மக்களும், தூக்கி வைத்துக் கொண்டாடத் தயாராக இருக்கின்றனர். "மது நாட்டிற்கு வீட்டிற்கு, உயிருக்கு கேடு' என்று எழுதிவைத்துவிட்டு, அதை அரசாங்கமே விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதுவிலக்கை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி.

தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., ஆகிய மூன்று கட்சித் தேர்தல் அறிக்கைகளிலும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன...

                இலவசங்கள் அறிவிப்பதே, தனி மனிதனின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல் தான். ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தால், அவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும். இலவசங்களை வாங்கி, கண் முன்னே எரிக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்யும் திருட்டுத்தனத்திற்கு மக்களை உடன் வைத்துக் கொள்ள, பணம் கொடுத்தால் காரியம் சாதித்துவிடலாம் என நினைக்கின்றனர். வெளிநாடுகளைப் போல கல்வி, மருத்துவம் மட்டுமே இலவசமாக வழங்க வேண்டும். இந்த இரண்டை தனியாருக்கு கொடுத்துவிட்டு, மக்களை அழிக்கும் மதுவை அரசு விற்பது வேடிக்கை, வேதனை.

திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான், அரசியல் கட்சிகளின் பிரசார பீரங்கிகளாக இருக்கின்றனர்...

               திரைத்துறையில் இருப்பவன், வயதாகும் வரை அதைப் பிழைப்பாக கருதுகிறான். சினிமாவில் இருக்கும் வரை, பொதுமக்களைப் பற்றி அவன் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு, அரசியலுக்கு வந்தால், அதை தியாகம் என்கிறான். என்னைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதையும், பிழைப்பு என்றே கூறுவேன்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லையா?

              மதுக்கடைகளை விட மோசமான வேலையை, இந்த 100 நாள் வேலை திட்டம் செய்து கொண்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களை சோம்பேறிகளாக்கும், நிலங்களை மலடாக்கும் இந்தத் திட்டத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே மின் தட்டுப்பாட்டால், விவசாய உற்பத்தி படுத்துவிட்டது. விவசாய துறைக்காக நியமிக்கப்படும் அமைச்சர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை. விவசாய உற்பத்தியை மேம்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

முடிவாக என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

            காமெடி நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகளை, தொலைக்காட்சியில் பார்த்து நாம் சிரித்துக் கொண்டிருப்பது போல், மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழனையும், தமிழகத்தின் நிலையையும் பார்த்து, அங்குள்ள மக்கள் சிரிப்பாய் சிரிக்கின்றனர். இளைஞர்கள் விழித்தெழுந்தால் தான் நாடு மீண்டும் தலை நிமிரும். எனவே, இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி, போராட முடிவு செய்திருக்கிறேன்.


நன்றி: தினமலர் 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior