காட்டுமன்னார்கோவில் :
ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுப்பதிவு குறித்த நிலவரத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் உடனடியாக தெரிவிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி இதுவரை இல்லாத அளவில் தற்போது தேர்தல் ஆணையத்தின் கிடுக்குப்பிடியால் அரசியல் கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சி. 20ம் தேதியில் இருந்து மாதிரி தேர்தல் பயிற்சி. பதட்டம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் சமயோஜிதமாக நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக தேர்தல் அலுவலர்களுக்கு பி.எஸ்.என்.எல்., சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் எந்த பிரச்னை குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கோ, தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 242 சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளின் நிலை குறித்து தேர்தல் ஆணையம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதுவாக யோசனை செயல்படுத்தியுள்ளனர்.
இதில் ஓட்டுச்சாவடியில் உள்ள அதிகாரி 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதம், ஆண், பெண் எண்ணிக்கை குறித்த விவரங்களை உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அதே சமயம் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பிரச்னை குறித்தும் தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் சரியான தகவல்களை பெறமுடியும் என்பதால் தேர்தல் கமிஷன் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக