உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மார்ச் 15, 2011

விருத்தாசலம் அருகே பழுதடைந்த வேளாண்மை விரிவாக்க மையம்


விருத்தாசலத்தை அடுத்த பாலக்கொல்லையில் பழுதடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் வேளாண்மை விரிவாக்க மையம்.
விருத்தாசலம்:

          விருத்தாசலம் அருகில் உள்ள பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மையம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இம்மையத்திலேயே வேளாண் பொருள்கள் வைக்கப்படுவதால் பாதுகாப்பாக இருக்குமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  

              விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதி பாலக்கொல்லை கிராமம். இங்கு தமிழக அரசு சார்பில் வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பாலக்கொல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 கிராமங்களுக்குத் தேவையான வேளாண் பொருள்களான ஜிப்சம் உள்ளிட்ட உரங்களை வைத்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.  

             ஜிப்சம் உள்ளிட்ட உரவகைகள் பல்லாயிரக்கணக்கில் மதிக்கத்தக்கதாகும். ஆனால் உரங்கள் மற்றும் வேளாண்மை பொருள்கள் வைத்திருக்கக்கூடிய பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையிலும், பராமரிப்பு இல்லாத நிலையிலும் உள்ளது.  

இதுகுறித்து பாலக்கொல்லை கிராம மக்கள் தெரிவித்தது:  

               வேளாண்மை விரிவாக்க மையம் மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் உள்ளது. கட்டடத்தின் முன்பக்கம் செடிகொடிகள், முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால் இங்கு வைத்திருக்கும் உரம் போன்ற பொருள்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.  மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடம், சுகாதார வளாகம் என பல்வேறு கட்டடங்கள் கட்டித்தரும் அரசு பழுதடைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.  

               எனவே தொடர்புடைய துறை அதிகாரிகள் பாலக்கொல்லை வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்ட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior