உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

கடலூர் மாவட்டத்தில் 6,053 பேருக்கு தபால் வாக்குச்சீட்டு

கடலூர்:

               தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பூட்டி சீல்வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற 13-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆனால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ஊழியர்கள், பணி நிமித்தம் காரணமாக வெளியூர் சென்றுள்ள அரசு அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்களித்து வருகிறார்கள்.

              இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அறைகளில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.   தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாக நடந்த 2-வது கட்ட பயிற்சி வகுப்புகளில் தபால் ஓட்டு போடுவதற்கு உரிய விண்ணப்பபடிவத்தை நிரப்பி கொடுத்தனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு தபால் ஓட்டு போடுவதற்கான வாக்கு சீட்டை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் பதிவு தபாலில் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

                 அதைபெற்றுக்கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாக்குச்சீட்டில் தங்களுக்கு விருப்பமுள்ள சின்னத்தின் எதிரே பேனாவால் டிக் செய்து அவற்றை தபால் உறையில் வைத்து பதிவு தபால் மூலமாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பி வைத்தோ, அல்லது நேரடியாக சென்றோ ஓட்டுப்பெட்டியில் வாக்குசீட்டு உள்ள தபால் உறையை போடவேண்டும்.  இதுதான் தபால் ஓட்டு போடும் முறை.   இந்த நிலையில் ஒருசில மாவட்டங்களில் தபால் ஓட்டு போடுவதற்கான வாக்கு சீட்டுகள் இன்னும் வந்து சேரவில்லை என அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
 
கடலூர் மாவட்டத்தில் தபால் ஓட்டு பற்றிய விவரங்கள் குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-

                    கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் ஓட்டு போடுவதற்காக 10,285 பேர் மனு வாங்கி சென்றனர். அவர்களில் 7,057 பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இதில் தகுதி உடைய 6,053 பேருக்கு வாக்கு சீட்டுகளை பதிவு தபாலில் அனுப்பி இருக்கிறோம். இதில் காவல்துறையை சேர்ந்தவர்கள் 401 பேர் ஆவார்கள். தபால் ஓட்டு போடுவதற்காக 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவல கத்தில் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டியின் அருகில் கண்காணிப்பாளர் ஒருவர் அமர்ந்து இருப்பார்.அவர் தபால் மூலம் வருகின்ற வாக்குச்சீட்டுகளை பதிவு செய்த பின்னர் அந்த வாக்குச்சீட்டு உள்ள தபால் உறையை ஓட்டுப்பெட்டிக்குள் போடப்படுகிறது.

                    கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூர் தொகுதியில் 932 தபால் ஓட்டுகளும், குறைந்த பட்சமாக பண்ருட்டியில் 507 ஓட்டுகளும் உள்ளன. தபால் ஓட்டு போடுவதற்கு அடுத்த மாதம் (மே) 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று காலை 8 மணியுடன் தபால் ஓட்டு போடுவது முடிவடைகிறது. தபால் ஓட்டுக்காக யாரும் பிரசாரம் செய்யக்கூடாது. அப்படி மீறி யாராவது பிரசாரம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

                 அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து தொகுதிகளில் உள்ள தபால் ஓட்டு பெட்டிகளுக்கும் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு வெப்கேமரா அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

               வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஒரு கட்டுபாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior