கடலூர்:
சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நகரம் மாவட்டத் தலைநகரான கடலூர். 1600-ம் ஆண்டுகளில் முதலில் டச்சுக்கார்களிடமும் பின்னர் போர்ச்சுக்கீசியர் வசமும் இறுதியாக ஆங்கிலேயரிடமும் கடலூர் இருந்துள்ளது. 1690-ல் செஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னரிடம் இருந்து, பிரிட்ஷார் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கடலூர் பகுதிகளை விலைக்கு வாங்கியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
1720 முதல் கடலூர் கோட்டை பிரிட்டிஷ் படையினரால் வலிமைப்படுத்தப்பட்டது. 1746 முதல் இந்தியாவில் பிரிட்டிஷாரின் தலைநகரமாக கடலூர் விளங்கியது. இடையிடையே புதுவையை தன்னகத்தே கொண்டு இருந்த பிரெஞ்சுப் படையினருக்கும், கடலூரை தலைமை இடமாகக் கொண்ட பிரிட்டிஷ் படையினருக்கும், கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போர்கள் நிகழ்ந்துள்ளன. 1758 ஏப்ரல் 29-ம் தேதி கடலூரில் நடந்த போரில் பிரிட்டிஷ் படையினர் 29 பேரும், பிரெஞ்சுப் படையினர் 600 பேரும் கொல்லப்பட்டதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
300 ஆண்டுகளுக்கு முன் நிலத்துக்கான, உரிமைக்கான போராட்டத்தில் போர்க் களமாகவும், மாநிலத் தலைநகரமாகவும் விளங்கிய கடலூர் இன்று, மாவட்டத் தலைநகரமாக, குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும், மக்கள் கடுமையாகப் போராடி வரும் நகரமாக இன்று மாறி இருக்கிறது. எனவே கடலூரை பொருத்தவரை காலங்கள் மாறினாலும் போராட்டங்கள் மாறவில்லை. போராட்டங்களின் வடிவங்கள்தான் மாறியிருக்கின்றன. ரூ. 60 கோடியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி முடிப்பதற்கு, ரூ.40 கோடிக்கு மேல் செலவிட்டு சாலை அமைக்க வேண்டியதாயிற்று.
திறமையற்ற நகராட்சி நிர்வாகம் காரணமாக, பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்தாலும், சாலை அமைக்கும் பணிகள் முடிவடையாது என்ற நிலைதான் நீடித்து வருகிறது. சுமார் 118 சாலைப் பணிகளில் 50 சதவீதம் பிப்ரவரி மாதத்துக்குள்ளும், மார்ச் 31-க்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டும், பல பணிகள் இன்னமும் முடிக்கப்படவில்லை. கோடை மழை தொடங்கி இருக்கும் நிலையில் நகரில் பல சாலைகள் சேறும் சகதியுமாக மீண்டும் மாறிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் கடலூர் மக்கள் சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பரிதாப நிலை உருவாகி விட்டது.
மார்ச் 1-ம் தேதிமுதல் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்து விட்டதால், சாலைப் பணிகள் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் கேட்பாருமில்லை, மேய்ப்பாரும் இல்லை என்ற நிலைக்குக் தள்ளப்பட்டு விட்டன. மே 15 வரை இப்பணிகளை கவனிக்க மேற்பார்வையிட நாதியற்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் ஒப்பந்தக்காரர்கள் வைத்ததுதான் வரிசை என்றாகிவிட்டது. இந்த நிலையில் பணி நிறைவடைய 3 மாதம் தாமதம் ஆகிவிட்டதால் பொருள்கள் விலையேற்றம் காரணமாக, டெண்டரில் குறிப்பிட்ட தொகையை உயர்த்தி வழங்கினால்தான் இனி வேலைகளை முடிக்கமுடியும் என்ற நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.
ஒருசில மாதங்களில் நகராட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்க இருக்கின்றன. எனவே முடிக்கப்படாத பணிகள் குறித்தும் புதிய பணிகள் குறித்தும் நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் கவலைப்படுமை என்பது சந்தேகமே. தற்போது சட்டப் பேரவைத் தேர்தலை காரணம் காட்டி முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகம், இனி நகராட்சித் தேர்தலை காரணம் காட்டி முடங்கப்போகிறது என்கிறார்கள் கடலூர் நகர மக்கள். அடிப்படை வசதிகளுக்கான கடலூர் மக்களின் போராட்டம் எப்போது முடிவடையும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக