உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

கடலூர் மத்திய சிறையில் ஜான் டேவிட் சரண்


 
கடலூர்:

           அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் சனிக்கிழமை மாலை சரண் அடைந்தார்  

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கில், முன்னதாக கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அடைந்தவர் ஜான் டேவிட் (34).  சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு (17). 1996-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தவர் ஜான் டேவிட். 

            கரூரை சேர்ந்த மருத்துவத் தம்பதியர் டேவிட் மாரிமுத்து, எஸ்தர் லட்சுமி ஆகியோரின் மகன்.  6-12-1996 அன்று நாவரசுவை ராகிங் காரணமாக ஜான்டேவிட் கொலை செய்தார். பின்னர் நாவரசுவின் உடலை, ஜான் டேவிட் பல துண்டுகளாக வெட்டினார். தலையை ஒரு பையில் போட்டு, அண்ணாமலைப் பல்கலக்கழகம் அருகே உள்ள வாய்க்காலில் போட்டார். உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து சென்னைக்கு கொண்டு சென்றார். வழியில் உள்ள வாய்கால்களில் கை, கால்களை வீசி எறிந்தார். தலை, கால், கைகளற்ற உடலை, சென்னை நகர பஸ் ஒன்றில் வைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். 

               இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஜான் டேவிட்டுக்கு, கடலூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.  தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததில், ஜான் டேவிட்டை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து புதன்கிழமை உத்தரவிட்டனர். 

                கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.  அதைத் தொடர்ந்து ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைய வேண்டும் அல்லது அவரை கடலூர் போலீஸôர் கைது செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கிடையே ஜான் டேவிட், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் மத போதகராக இருப்பதாகவும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாயின.  ஜான் டேவிட்டை கைது செய்ய 4 தனிப் படைகளை அமைத்து இருப்பதாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் அறிவித்தார்.  

               தனி போலீஸ் படையினர் கரூர், திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  இந்த நிலையில் சனிக்கிழமை மாலை ஜான் டேவிட் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டுவரப்படுவதாக ஒரு தகவலும், ஜான்டேவிட் தானாக வந்து, கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாக மற்றொரு தகவலும் வெளியாயின.  மாலை 5 மணிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மத்திய சிறைச் சாலைக்கு விரைந்து வந்த பிறகே உண்மை தெரிந்தது.

            ஜான் டேவிட் மாலை 4.30 மணிக்கு, தனது தாயார் மற்றும் வழக்கறிஞருடன் வந்து கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்தார் என்பது பின்னரே தெரிய வந்தது.  போலீஸ் மற்றும் செய்தியாளர்கள் கண்ணிóல படாமல் சிறைச் சாலையில் சரண் அடைந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  

எஸ்.பி. பேட்டி: 

ஜான் டேவிட் சரண் அடைந்தது குறித்து எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் கூறியது: 

              உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்து ஜான் டேவிட்டை கைது செய்ய திட்டமிட்டோம். அதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் திருச்சி, கரூர், சென்னை போன்ற இடங்களில் விசாரணை நடத்தினர்.  தீவிர விசாரணையில் ஜான் டேவிட் சென்னை வேளச்சேரியில் உள்ள பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில், ஜான் மாரிமுத்து என்ற பெயரில் வேலை பார்ப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த நிறுவனத்தை நெருங்கும் நிலையில், ஜான் டேவிட் புதுவைக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது.  போலீஸ் வருவதற்குள் ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் சரண் அடைந்து விட்டதாகத் தகவல் வந்து விட்டது என்றார் எஸ்.பி. 

 ஜான் டேவிட்டின் வழக்கறிஞர் ஆறுமுக ராஜன் கூறுகையில்,

          உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இணைய தளத்தில் பார்த்ததும், ஜான் டேவிடே சரண் அடைய முடிவு செய்தார். அவரது வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் விரைவில் செய்யப்படும் என்றார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior