உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 25, 2011

புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபா மறைந்தார் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி



            ஆந்திர மாநிலத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் அவதரித்து உலகம் முழுக்க தன்னுடைய அருள் வெள்ளத்தைப் பாய்ச்சிய ஆன்மிகச் செல்வர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு முக்தி அடைந்தார். 

            அவருக்கு வயது 86.  வெறும் உபதேசங்கள் மட்டும் போதாது என்று உணர்ந்து ஏழைகள் பால் கருணையும் இரக்கமும் கொண்டு கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நிறுவி இலவசமாகவே எல்லாவற்றையும் பெற வழிகாட்டிய அருள் செல்வரின் மறைவு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.  நாட்டு மக்களின் நலனுக்காகவே தன் வழியில் உழைத்த பாபா, மார்ச் 28 முதல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் நினைவு திரும்பாமலேயே இயற்கை எய்தினார்.  
 
மருத்துவ அறிக்கை: 
 
             பகவான் ஸ்ரீ சத்யசாய் பாபா இன்று நம்மிடையே இல்லை. இதயம் செயலிழந்ததால் காலை 7.40 மணிக்கு அவர் தன்னுடைய பூத உடலை நீத்தார். புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் அரங்கில் அவருடைய பூத உடல் பக்தர்கள் தரிசிக்க வசதியாக ஞாயிறு மாலை 6 மணி முதல் திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்களும் வைக்கப்பட்டிருக்கும்' என்று ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிலையத்தின் இயக்குநரான ஏ.என். சஃபாயா அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.
 
 கீதா ரெட்டி:  
 
             ஆந்திரத் தொழில்துறை அமைச்சரும் சாய் பக்தருமான ஜே.கீதா ரெட்டி, ஒருங்கிணைப்புப் பணிக்காக பிரசாந்தி நிலையத்தில் முகாமிட்டிருக்கிறார். பாபாவின் பூத உடல் வரும் புதன்கிழமை காலை குல்வந்த் அரங்கிலேயே அடக்கம் செய்யப்படும் என்றும் நேரம் பிறகு தீர்மானிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். 
 
 4 நாள் அரசு துக்கம்: 
 
              ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு சுமார் 170 நாடுகளில் 3 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் இருப்பதால் அவர்கள் கடல் கடந்து வந்து பாபாவைத் தரிசிக்க வசதியாக 4 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  உடல் அடக்கம் நடைபெறும் புதன்கிழமை, அனந்தப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆன்மிகப் பேரரசை நிறுவியவர் என்பதால் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது என்று ஆந்திர அரசு முடிவு செய்திருக்கிறது.  
 
தலைவர்கள் வருகை: 
 
            பாபாவின் மறைவுச் செய்தி கேட்டவுடன் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்திக்கு விரைந்தனர். பாபாவின்பால் பக்தி கொண்ட அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்படக் கலைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள் புட்டபர்த்தி நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.  புட்டபர்த்தியில் உள்ள சாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான தனி விமான நிலையம் பெரிய விமானங்களும் ஹெலிகாப்டர்களும் வந்து இறங்க வசதியாக தயார்படுத்தப்பட்டுவிட்டது.  மாநிலப் போலீசா ரும் அனந்தப்பூர் மாவட்டம் முழுக்க காவலையும் கண்காணிப்பையும் பலப்படுத்தியிருக்கின்றனர். 
 
            பிரமுகர்களும் பக்தர்களும் பாதுகாப்பாக வந்து பாபாவைத் தரிசிக்கவும் நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்படுகின்றன.  பக்தர்களுக்காக போக்குவரத்து, உணவு, குடிநீர், முதலுதவிச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை சாய் சமாஜங்களே செய்துள்ளன.  சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒழுங்கு, கட்டுப்பாடு, உணர்ச்சிகளுக்கு ஆள்படாமை, பிறருக்கு உதவுதல், அமைதி காத்தல் ஆகியவற்றை அவருடைய பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது. 
 
 1926-ல் அவதாரம்: 
 
              புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு ஸ்ரீ சாய் பாபா அவதாரம் செய்தார். அப்போது அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்ய நாராயண ராஜு. சத்யம், சிவம், சுந்தரம் என்ற தத்துவங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த பாபா தன்னுடைய பக்தர்களுக்காக காற்றிலிருந்து விபூதி வரவழைப்பது, லிங்கங்களை வரவழைத்துத் தருவது போன்ற சித்து வேலைகளைச் செய்வார். அதைத்தான் அவருடைய விமர்சகர்கள் மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். ஆனால் பாபாவின் அருளாசியால் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டதால் அவரை அவதார புருஷனாகவே மக்கள் பார்த்தனர். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பாரதவாசிகள் முதல் படித்த வெளிநாட்டவர் வரை அவருடைய சீட கோடிகளின் எண்ணிக்கையும் தரமும் அனேகம்.  பாபா மறையவில்லை. கோடிக்கணக்கான சீடர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார். அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior