கடலூர் :
இந்தியா உலக கோப்பை வென்றதும் மாவட்டம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, மாதிரி உலக கோப்பையுடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகள் நடத்தின. பிப்ரவரி 19ம் தேதி முதல் துவங்கிய போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 14 அணிகள் பங்கேற்றன. அரையிறுதியில் இலங்கை, நியூசிலாந்தையும், இந்தியா, பாகிஸ்தானையும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. பொரும்பாலான பகுதிகளில் ரசிகர்கள் "டிவி'யில் கிரிக்கெட் பார்க்க வீட்டிற்குள் முடங்கியதால் வீதிகள் வெறிச்சோடின.
கடை வீதியில் உள்ள ஒரு சில கடைகள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடுமுறை விடப்பட்டிருந்தன. முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன் எடுத்தது. இந்திய அணி விளையாடியத் துவங்கியதும் ஷேவாக் இரண்டாவது பந்திலும், டெண்டுல்கர் 18 ரன்னிலும் அடுத்தடுத்து "அவுட்'டானதால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. நட்சத்திர வீரர்கள் அவுட்டானதால் ரசிகர்கள் பெறும்பாலானோர் இரவு 7 மணிக்கு "டிவி'யை ஆப் செய்து விட்டு ஆங்காங்கே தெருக்களில் கூடி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய வீரர்களால் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறி வெற்றிக் கனியை பறித்தது. அதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும், தேசிய கொடியுடன், தாரை தப்பட்டையுடன் வலம் வந்து ஆரவாரத்துடன் கொண்டாடினர். திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் ரசிகர்கள், மாதிரி உலக கோப்பையுடன் ஊர்வலமாக வந்து இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க என கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக