கடலூர்:
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தியில், வியாழக்கிழமை வரை, பொதுமக்களிடம் இருந்து 1,313 கோரிக்கை மனுக்கள் குவிந்தன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 6-ம் தேதி முதல் ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நடந்து வருகிறது. குறிஞ்சிப்பாடியில் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. வியாழக்கிழமை வரை நடைபெற்ற ஜமாபந்திக் கூட்டங்களில், குள்ளஞ்சாவடி குறுவட்டத்துக்கு உள்பட்ட 42 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து, 1,313 மனுக்கள் பெறப்பட்டன.
நிலப்பட்டா, மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சான்றிதழ்கள், ரேஷன்கார்டுகள் கோரி இந்த மனுக்கள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் .10 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை, 4 பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ஜமாபந்தி நிறைவு நாளான 13-ம் தேதி, தகுதியான பயனாளிகளுக்கு தனிப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி தெரிவித்தார். ஜமாபந்தியில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோக்ராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக