உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 13, 2011

கடலூர் மாவட்டத்தை புறக்கணிக்கும் நெடுஞ்சாலைத்துறை

கடலூர் :

                    தமிழகத்தில் மிக மோசமான சாலைகளை உடைய மாவட்டமாக கடலூர் மாவட்டம் திகழ்கிறது.

                      கடலூர் மாவட்டதிலிருந்து பிற மாவட்டங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளதால் இம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி, இம்மாவட்டதிற்கு வந்து செல்லும் பிற மாவட்டத்தினரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக கடலூர் விளங்கியது. அதன் பிரதிபலிப்பு மாறாமல் இன்னும் அதன் சுவடுகளுடன் கடலூர் மாவட்டம் காட்சியளிக்கிறது. 

                  அதற்கு சான்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களை காணலாம்.  அத்தகைய பழமைவாய்ந்த கடலூர் மாவட்டத்தில், சாலை வசதி ஏனோ இன்னும் தரம் உயர்த்தப்படாமலும்,  அகலமாக்கப்படாமலும், குறுகிய மற்றும் குண்டும் குழியுமான சாலைகளாகவே காட்சியளிக்கின்றன. தமிழகத்தில் உள்ள சாலைகளின் சாலைகளின் நீளம் மொத்தம் 199040 கி.மீ. இதில் 61640 கி.மீ. சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 4873 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 9384 கி.மீ. மாவட்ட முக்கிய சாலைகளின் நீளம் 11288 கி.மீ., மாவட்ட இதர சாலைகளின் நீளம் 63096 கி.மீ. ஆகும். 

                 இதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் நீளம் 1898 கி.மீ. இதில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 94.98 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் 308.96 கி.மீ, மாவட்ட முக்கிய சாலைகளின் நீளம் 395.64 கி.மீ. மாவட்டத்தின் இதர சாலைகளின் நீளம் 1204.85 கி.மீ ஆகும்.  இதில் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 93 கி.மீ நீள சாலைகள் தரம் உயர்த்தப்படவுள்ளது. மற்ற மாவட்ட சாலை வசதிகளைக் காட்டிலும் கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளது.  

                 குறிப்பாக கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து சேலம் செல்லும் சாலை, விருத்தாசலம்-வேப்பூர் வரையிலான சாலை, கடலூர் மற்றும் சிதம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் சாலை, விருத்தாசலம் - தொழுதூர் சாலை ஆகியவை போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளன. கார் வைத்திருப்பவர்கள் பண்ருட்டி மார்க்கமாக சென்று கள்ளக்குறிச்சி வழியாக சேலம் சென்றுவிடுகின்றனர். சரக்கு ஏற்றிவரும் லாரிகள் மேற்கண்ட சாலையில் லாரியை பழுது இல்லாமல் ஓட்டிவந்தால் அதுவே ஒரு பெரும் சாதனை என்றே குறிப்பிடலாம். 

               பண்ருட்டியிலிருந்து - விக்கிரவாண்டி இடையிலான சாலையும் இதே நிலையில்தான் உள்ளது. இதனால் சென்னை செல்வோர் கடலூர் வழியாக பதுச்சேரி சென்று கடற்கரை சாலை வழியாக சென்னை செல்கின்றனர். பண்ருட்டியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையும் படுமோசமான நிலையில் உள்ளது. தங்கநாற்கர சாலைத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தபடவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி - தஞ்சை சாலை மார்க்கத்தில் இம்மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கண்டரக்கோட்டை- மீன்சுருட்டி வரையிலான 65 கி.மீ. சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

              தஞ்சை, கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வழியாகத்தான் சென்னை செல்லவேண்டும். இந்தசாலை ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்திலும் மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. இதை சீரமைக்கவே ஒவ்வொரு ஆண்டும் ரூ. 17 கோடியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கிய போதிலும் இதுவரை முழுமை பெறவில்லை. இந்த சாலையில் வடலூருக்கு 2 கிலோ மீட்டருக்கு முன் அமைந்துள்ள, 100 ஆண்டுகளை கடந்த குறுகிய பாலம் இதுவரை சீரமைக்கப்படாமல், குறுகிய பாலமாகவே இருப்பதால் இந்த பாலத்தில் 10 தினங்களுக்கு ஒரு விபத்து நடந்தேறியவண்ணம் உள்ளது. 

               பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் இடிந்த நிலையிலும், பாலத்தின் நிலை குறித்து எச்சரிக்கை பதாகைகளோ அல்லது சிவப்பு விளக்குகளோ இதுவரை பொருத்தாதது நெடுஞ்சாலைத்துறையினரின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு மாவட்டதில் சாலை வசதிகள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில், அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் தொழில் நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களை அமைக்க முன்வருவார்கள். 

           கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி விளங்குகிறது.  கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கடலூரில் சிறிய துறைமும் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கடலூர் மாவட்டத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் முன்வராதது வருத்தமளிக்கிறது. தற்போது இரு அமைச்சர்கள் இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களாவது மாவட்டத்தின் நிலையை உணர்ந்து சாலைகள் மேம்பட உதவி புரிவார்களா என்ற எதிர்பாப்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior