உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 13, 2011

தமிழ் வழி பி.இ.: தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாமா

              தேர்வுகளைத் தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி பி.இ. படிக்கும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.  

                பள்ளிகளில் பிளஸ்-2 வரை தமிழ் வழியில் பயின்று வரும் மாணவர்கள், பொறியியல் பட்ட பாடங்களை எளிதாகப் புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. முதல்கட்டமாக பி.இ. மெக்கானிகல் மற்றும் சிவில் பிரிவுகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போது படித்து வருகின்றனர். 

                   சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இந்த தமிழ் வழி பி.இ. படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.  அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க. பொன்முடி, தமிழ் வழி பி.இ. படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தேர்வுகளை தமிழ் - ஆங்கிலம் கலந்து எழுதலாம் எனக் கூறினார். ஆனால், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தேர்வுகளைத் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று துறைத் தலைவர்கள் சிலர் வலியுறுத்தினர். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதல் மாதிரித் தேர்வின்போது, தூய தமிழில் கேள்வித் தாள் தயாரிக்கப்பட்டு இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

                 இதனால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.  இதைத் தொடர்ந்து, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதலாம் என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹரும் கூறினார். இதனையடுத்து, மாணவர்கள் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுதி வந்தனர். இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புதிதாக சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழிருந்த உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் அதன் கீழ் மாற்றப்பட்டன. 

                  இந்த நிலையில், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், அனைத்துக் கல்லூரிகளுக்கும் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பினார். இதனால் மீண்டும் மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இந்த உத்தரவு காரணமாக, சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியை (விழுப்புரம் வளாகம்) சேர்ந்த 4 தமிழ் வழி பி.இ. மாணவர்கள், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டதாக கல்லூரி பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

                 இப்போது 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைத்து, அண்ணா பல்கலைகழகத்தை முன்பிருந்த நிலைக்கு மாற்ற தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தங்களுக்கும் தமிழ் - ஆங்கிலம் கலந்து தேர்வு எழுத தமிழக அரசு உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் வழி மாணவர்களிடைய எழுந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் சில, பாடத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளன. இப்போது 5 பல்கலைக்கழகங்களும் ஒன்றாக இணைக்கப்படுவதால், பாடத் திட்ட ரீதியாக தங்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா என்ற அச்சமும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.  

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி (விழுப்புரம் வளாகம்) பேராசிரியர் ஜெயச்சந்திரன் கூறியது:  

              பல்கலைக்கழகங்கள் பாடத் திட்டத்தில் சிறிய அளவில்தான் மாற்றங்களைச் செய்துள்ளன. அதே நேரம், தரத்தைக் குறைக்கும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து, மீண்டும் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்குவதால் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்கப் போவதில்லை. மேலும், தமிழ் வழி பி.இ. படிப்புகளின் பாடத் திட்டத்தில் மாற்றம் எதுவும் இதுவரை செய்யப்படவில்லை என்றார். 

சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது: 

                அண்ணா பல்கலைக்கழகங்களை இணைப்பது என்ற தமிழக அரசின் முடிவால், மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பாடத் திட்டம் சர்வதேச தரம் உடையது என்பதை அனைவரும் அறிவர். எனவே, ஒருங்கிணைப்பு முடிவால் மாணவர்களுக்கு நன்மைதான் ஏற்படும். தொடக்கத்தில் சிறு பிரச்னைகள் எழும் என்றபோதும், பின்னர் சரியாகிவிடும் என்று அவர் கூறினார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior