உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 17, 2011

கடலூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கை: ரூ.2.75 லட்சம் வரி வசூல்

 கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக நடந்த வாகனத் தணிக்கைகளின்போது ஆம்னி பஸ்களிடம் இருந்து, வாகன வரி ரூ. 2.75 லட்சம் வசூலிக்கப் பட்டதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

                 கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பஸ்களின் ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தும் வகையில், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மற்றும் பஸ் ஓட்டுநர்கள் கூட்டத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் ஏற்பாடு செய்து இருந்தார்.  

கூட்டம் முடிந்ததும் போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் கூறியது:  

          பள்ளி வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய உச்சநீதிமன்றத்தின் 9 வழிகாட்டுதல்கள் குறித்து, மீண்டும் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப் பட்டது. பஸ்களில் கண்டிப்பாக தீயணைப்புக் கருவிகள் வைத்து இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வாகனங்களில் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்களையும் இதரப் பயணிகளையும் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விதிமுறைகளை கடைபிடிக்காத ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

               ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். இல்லையேல் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறோம்.  கடலூர் மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 20 வாகனங்கள் வீதம் ஆம்னி பஸ்களை சோதனையிட்டு வருகிறோம். அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பிற மாநிலங்களில் பதிவு செய்து, தமிழகத்தில் இயக்கப்படும் ஆம்னி பஸ்களுக்கு வாகன வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டு, இதுவரை ரூ. 2.75 லட்சம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. 

                    வாகனங்களில் காற்றொலிப்பான்கள் பயன்படுத்தக் கூடாது என்றும், உத்தரவிடப் பட்டுள்ளது. இனி அடிக்கடி சோதனையிட்டு காற்றொலிப்பான்களை அகற்றுவோம், அபராதமும் விதிக்கப்படும் என்றார் ஜெய்சங்கர்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior