சிதம்பரம்:
சிதம்பரம் அருகே கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் சி.முட்லூர் அருகே ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையினால் தொடர் விபத்து நடைபெறுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரி, வட்டார வாகன போக்குவரத்து அலுவலகம், பிச்சாவரம் செல்லும் வழியில் இந்த பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் தொடக்கப்பகுதி உயரமாக உள்ளது. இதில் எந்த ஒளி பிரதிபலிப்பானும் அமைக்கப்படவில்லை.
இதனால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பாலத்தில் உள்ள நடைபாதை கட்டை தெரியாததால் அதில் மோதி தொடர்ந்து விபத்து நடைபெறுகிறது. கடந்த வாரம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் நகரமன்ற உறுப்பினர் ஆ. ரமேஷ் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே வந்த பஸ்ஸின் லைட் வெளிச்சத்தில் பாலத்தின் நடைபாதை கட்டை தெரியாமல் அக்கட்டையில் மோதி தூக்கி எரியப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
ஏற்கனவே இதே சாலையில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்து போனார். இது போன்று அடிக்கடி தொடர் விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தின் நடைபாதையை சரி செய்து பிரதிபலிப்பானை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக