
விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் காணப்படும் ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கோபுரம்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாரம் சத்தியவாடி கிராமத்தில் மிகத் தொன்மை வாய்ந்த சிவன்கோயில் உள்ளது. கோயிலில் உள்ள சிவனை ஆலந்துறை ஈஸ்வரர் என அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இப்பழைமைவாய்ந்த ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும், சிலர் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கான கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் 200 அல்லது 800 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் தற்போது போதிய பராமரிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் பாழடைந்து வருகிறது.
இது குறித்து சத்தியவாடி கிராம மக்கள் தெரிவித்தது:
"ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலில் ஆலந்துறை ஈஸ்வரர், அழகியபொன்மணி அம்மன், அஸ்திரதேவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் உள்ளன. இந்த கோயில் தற்போது இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் தற்போது கோயில் வெளிப்புற கோபுரம், முன்பக்க கோபுர கதவு, மூலவர் கோயிலில் உள்ள கதவுகள் மிகவும் மோசமான நிலையிலும், உடைந்து விழும் நிலையிலும் உள்ளது.
அதேபோல் கோயில் உள்பக்கம் கட்டப்பட்டுள்ள சிறுசிறு மண்டபங்களும் பாழடைந்து உள்ளது. புகழ்பெற்று விளங்கிய ஆலந்துறை ஈஸ்வரர் கோயில் தற்போது பராமரிப்பும், பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் வருத்தமளிக்கிறது' என தெரிவித்தனர். எனவே இந்து அறநிலையத் துறை நிர்வாகம் அல்லது தொடர்புடைய அரசு நிர்வாகம் பழைமைவாய்ந்த சத்தியவாடி ஆலந்துறை ஈஸ்வரர் கோயிலை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக