உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

நெய்வேலியில் கேந்திர வித்யாலய பள்ளி விரைவில் தொடக்கம்

நெய்வேலி:

             நெய்வேலியில் மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயலபடக் கூடிய கேந்திர வித்யாலய பள்ளி இந்த கல்வியாண்டு முதல் செயல்படவுள்ளது.

              நெய்வேலியில் பல்வேறு மெட்ரிக் பள்ளிகளும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளும், மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் ஒரு பள்ளியும் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில் 40 ஆயிரம், மாணவ,மாணவியர் பயிலுகின்றனர். இந்நிலையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 1200 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் பணியிட மாற்றம் செய்யப்படுவதால், இவர்களின் பிள்ளைகளின் படிப்பும் இடத்திற்கேற்றவாறு மாறுபடுகிறது. 

          நெய்வேலியில் ஜவகர் கல்விக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினருக்கு என ஒதுக்கீடு எதுவும் கிடையாது. எனவே அவர்களது பிள்ளைகளை சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்கவைக்க அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நெய்வேலியில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரிகள், நெய்வேலியில் கேந்திர வித்யாலய பள்ளியை அமைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

                என்.எல்.சி. நிர்வாகமும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் கோரிக்கைக்கு பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நெய்வேலி கேந்திர வித்யாலய பள்ளியை அமைக்க ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, என்எல்சி நிர்வாகம் முழுவீச்சில் அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. 

                இதற்காக என்.எல்.சி. தலைவர் மேற்பார்வையில் இயங்கக் கூடிய ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் இரு என்.எல்.சி. அதிகாரிகள், இரு கல்வியாளர்கள், இரு பெற்றோர்கள் அடங்குவர். இக்குழு பள்ளி நடைமுறைகளை கண்காணித்து அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கும். இப்பள்ளிகள் நெய்வேலி வட்டம் 2 மற்றும் 3-ல் இயங்கி வந்த என்.எல்.சி. தொடக்கப் பள்ளி கட்டடங்களிலேயே செயல்படுத்தப்படவுள்ளது. வகுப்பறைகளும் தயார் நிலையில் உள்ளன. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெறுகிறது. 

              கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக நெய்வேலியில்  அமையவுள்ள கேந்திர வித்யாலய பள்ளியை அனைவரும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர். இப்பள்ளிகள் இம்மாத 3-வது வாரத்தில் இருந்து செயல்படும் எனத் தெரியவருகிறது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior