உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 06, 2011

குழந்தை எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்: நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்


தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.
 
நெய்வேலி:

         இந்தியாவில் குழந்தை எழுத்தாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.  

             குழந்தைகள் நல்ல இலக்கியத்தைப் படிக்காததால் வாசிக்கும் பழக்கத்தை இழந்துள்ளனர். குழந்தையை குழந்தையாகப் பார்க்கும் பக்குவமும், அவர்களுக்கான படைப்புகளும் இல்லாதத் துர்பாக்கியம் இந்தியாவில் தான் உள்ளது. மேலை நாடுகளில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.  

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தினமணி நாளிதழ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சியின் 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமை விருந்தினராகக் கலந்துக்கொண்டு மேலும் பேசியது: 

              நெய்வேலியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களுக்கு மரியாதை உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல எழுத்தாளர்களுக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஒரு மெக்காவாகவும், ஜெருசலமாகவும் திகழ்கிறது. நெய்வேலியில் இரண்டு சுரங்கங்கள் உள்ளன. ஒன்று நிலக்கரி சுரங்கம் மற்றொன்று அறிவு சுரங்கத்தைத் தோண்டி எடுக்கின்ற புத்தகக் கண்காட்சி ஆகும்.  அரசு நிறுவனங்கள் மக்கள் வரிப் பணத்தை விரயம் செய்வதாகப் பலர் கருதுகின்றனர். 

              இந்நிறுவனங்கள் வேலை வாய்ப்பு, சம்பளம் வழங்குவதுடன் லாபத்தை எடுத்துக்கொண்டு செல்வதுடன் முடிந்து விடாமல், குடியிருப்புகளை ஏற்படுத்தி அதில் பல மாநிலத்தவர்களை குடியமர்த்தி இந்தியாவில் சகோதரத்தையும், ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. நானும் இதுபோன்று ஒரு காலனி குடியிருப்பில் வசித்துவந்தவன் தான். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சமுதாய நல்லிணக்கத்துடன் புத்தகக் கண்காட்சியை நடத்தி நாளைய குழந்தைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இங்கு விருது பெற்ற குழந்தை எழுத்தாளர் வேலு சரவணன் சாகித்ய அகாதெமி விருது பெற வேண்டும் என நான் கூறியது என் அடிமனதில் இருந்து வந்தது. 

              குழந்தைகள் நல்ல இலக்கியத்தைப் படிக்காததால் வாசிக்கும் பழக்கத்தை இழந்துள்ளனர். இந்தியாவில் பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் தான் உள்ளனர் என்பதற்கு பத்திரிகைகளும் ஒரு காரணம் என்பதை கனத்த மனதுடன் கூறுகிறேன். குழந்தை எழுத்தாளர்களுக்கு மரியாதை, உரிய சன்மானம் வழங்கப்படாததுதான் இந்நிலைக்கு காரணம். இது மாற்றப்பட வேண்டும். செய்தி வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டதாக டிஜிபி பாலசுப்பிரமணியன் கூறினார். 

              குழந்தைகளைப் படிக்க, வாசிக்கப் பெற்றோர்கள் வழிகாட்டாத நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் புத்தகம் வாசிப்பு இருக்காது. எனவே குழந்தை இதழ்கள், படைப்புகள் வரவேண்டும். மாவட்டம் மற்றும் சிற்றூர்களில் இருந்து குழந்தை படைப்பாளர்கள் உருவாக வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தினமணியின் சிறுவர் மணியில் குழந்தை எழுத்தாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை ஆசிரியர் என்ற முறையில் கூறிக்கொள்கிறேன். சிறுவர் மணிக்கு உங்கள் குழந்தைகளை எழுதி அனுப்பக் கூறுங்கள் அதை நாங்கள் செவ்வனே வெளியிடுவோம். 

             நான் முன்பு கூறியது போல நான் தினமணி ஆசிரியராக இருக்கும் வரையில், புத்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்குமானால், அதில் நான் தவறாமல் கலந்துகொள்வேன். இப்புத்தகக் கண்காட்சி தொடர்ந்து பல தலைமுறைகளை கடந்து, எழுத்துலகுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழவேண்டும் என தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் கூறினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior