உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் ரசாயன உரங்களின் விலை உயர்வு


கடலூர்:
 
             ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர்.  
 
                தமிழகத்தில் விவசாயப் பணிகள் பெரும்பாலும் ஆடிப் பட்டத்தில்தான் தொடங்குகின்றன. தென்மேற்குப் பருவழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடிப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.  ஆடி மாதம் 18-ம் தேதிக்குப் பிறகு கரும்பு விதைக் கரணைகள் பதிப்பது, சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தொடங்க இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.40 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஏனைய பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் நிலங்களில், சம்பா நெல் சாகுபடிப் பணிகள் தொடங்க இருக்கின்றன.  இந்நிலையில் ரசாயன உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.  
 
                   1-4-2010-க்குப் பிறகு மத்திய அரசு புதிய உரக் கொள்கையை அறிவித்தது. அதன் பிறகு யூரியா உரம் தவிர, ஏனைய உரங்களின் விலைகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டன.  உரத்துக்கான மானியம் ரூ.1 லட்சம் கோடி, உரத் தொழிற்சாலைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் யூரியை தவிர மற்ற ரசாயன உரங்களின் விலைகள், வாரம்தோறும் உயர்த்தப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். உர மூட்டைகளில் அச்சிட்டு இருக்கும் விலையைவிட கூடுதல் விலைக்கு விற்றால் மட்டுமே, நடவடிக்கை எடுக்கப்படும் என்று, வேளாண்துறை அறிவிக்கிறது. 
 
              6 மாதங்களுக்கு முன் டி.ஏ.பி. உரம், மூட்டை (50 கிலோ) ரூ. 480 ஆக இருந்தது, தற்போது ரூ. 610 முல் ரூ. 656 வரை விற்பனை செய்யப்படுகிறது.  பொட்டாஷ் உரம் மூட்டை ரூ. 260 ஆக இருந்தது, தற்போது ரூ. 312 ஆக மூட்டைகளில் அச்சிடப்பட்டு இருந்தும், ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொட்டாஷ் உரம் பெருமளவுக்கு தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். 6 மாதங்களுக்கு முன் 17-17-17 கலப்பு உரம் மூட்டை ரூ. 450 ஆக இருந்தது, தற்போது ரூ. 550 ஆகவும், 20-20-13 கலப்பு உரம் மூட்டை ரூ. 355 ஆக இருந்தது தற்போது, ரூ.510 ஆகவும், சூப்பர் பாஸ்பேட் உரம் மூட்டை ரூ. 180 ஆக இருந்தது ரூ. 240 ஆகவும் உயர்ந்து விட்டது.  யூரியா தவிர மற்ற உரங்களில் விலைகள் வாரம் தோறும் உயர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 
              ஆகஸ்ட் முதல் வாரத்தில் சாகுபடிப் பணிகள் மும்முரமாக நடைபெற இருக்கும் நிலையில், உரங்களின் விலையேற்றம் விவசாயிகளை பெரிதும் கவலைக் கொள்ளச் செய்து உள்ளது.  ஆகஸ்ட் மாதத்துக்கு மேல், கடலூர் மாவட்ட சம்பா சாகுபடிக்கு மட்டும், குறைந்தபட்சம் டி.ஏ.பி. உரம் 3 லட்சம் மூட்டைகளும், யூரியா 1.5 லட்சம் மூட்டைகளும், பொட்டாஷ் உரம் 50 ஆயிரம் மூட்டைகளும் தேவைப்படும் என்று வேளாண் அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
 
இது குறித்து மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
 
          "யூரியா தவிர மற்ற ரசாயன உரங்களின் விலைகள், அரசின் கட்டுப்பாடு இல்லாததால், கடுமையாக உயர்ந்து வருகின்றன.வாரம்தோறும் விலைகள் அதிகரிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் உரங்களின் தேவை அதிகரிக்கும் நிலையில், விலைகள் மேலும் தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது. பொட்டாஷ் உரம் பற்றாக்குறையாக இருப்பதால், மூட்டைகளில் அச்சிட்ட விலைகளை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.நெல், கரும்பு உள்ளிட்ட விளை பொருள்களுக்கு, ஆதார விலைகளை உயர்த்தாதபோது, உரங்களின் விலைகளை மட்டும் உயர்த்துவதில் நியாயமில்லை' என்றார். 
 
 பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், 
 
              "பொட்டாஷ் உரம் 45 நாள்களாகக் கிடைக்கவில்லை. தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்' என்றார். 
 
இது குறித்து வேளாண் அலுவலர் ஒருவர் கூறுகையில், 
 
               "யூரியா உரம் விலை மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற உரங்களின் விலைகள் மூட்டைகளில் அச்சிட்டதைவிடக் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆனால் உரங்களின் விலைகளை உர உற்பத்தி நிறுவனங்கள் வாரம் தோறும் உயர்த்துகின்றன. அதிக விலைக்கு விற்பதாகப் புகார் வந்து, நடவடிக்கை எடுக்கச் செல்வதற்குள், விலை உயர்ந்து விடுகிறது. இதனால் நடவடிக்கை எடுப்பதிலும் பெரிதும் குழப்பம் ஏற்படுகிறது' என்றார்.
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior