உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஆகஸ்ட் 04, 2011

சுய வேலை வாய்ப்பு: வாழை நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள்

கடலூர்: 

               வாழை மரங்களில் குலைகள் வெட்டிய பின், வாழை மட்டைகளை குப்பையாகக் கருதப்பட்டு வந்த காலம் ஒன்று.  

            ஆனால் குப்பையாக்கப்படும் அந்த வாழை மட்டைகளை மூலப் பொருளாகக் கொண்டு, சிறந்த வருவாய் ஈட்டும் சிறு தொழிற்சாலையையே நடத்தலாம் என்று பரிந்துரைக்கிறது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை.  தமிழகத்தில் சுமார் 2.80 லட்சம் ஏக்கரில், வாழை மரங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகிறது.  அனைத்து ரக வாழையில் இருந்தும் நார் பிரித்து எடுக்க முடியும். வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்தபின் 48 மணி நேரத்தில் நார் பிரித்து எடுக்கப்பட வேண்டும். வாழை நாரில் இருந்து நீர்ப் பகுதி வெளியேற சூரிய வெளிச்சத்திலோ, நிழலிலோ காய வைக்க வேண்டும்.  

             வாழை நாரில் 62 சதவீதம் செல்லுலோஸ், 29 சதவீதம் லிக்னின், 3 சதவீதம் ஹெமி செல்லுலோஸ், 2 சதவீதம் பெக்டின், 4 சதவீதம் இதர ரசாயனங்கள் உள்ளன. வாழை நார் சணல் போல் பயன்படுத்தப்படுகிறது. சணலை விட பன்மடங்கு உறுதியானது என்றும் கண்டறியப்பட்டு இருக்கிறது. வாழை நாரில் இருந்து துணிகள் தயாரிக்கப் படுகிறது.  

நாரில் தயாரிக்கப்படும் பொருள்கள்:  

              சாக்குப் பைகள், மிதியடிகள், தரை விரிப்புகள், வீட்டு அலங்கார விரிப்புகள், அலங்கார பைகள், டிஸ்ஸ பேப்பர், பில்டர் பேப்பர், அலங்கார பேப்பர் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.  ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் வாழை நார் கிடைக்கும். வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம், வாழை அறுவடைக்கு பின்னர், வாழையின் தேவையில்லாத பகுதிகளான இலைகளின் தண்டுப்பகுதி, இலைக் காம்புப் பகுதி, வாழைத்தாரின் காம்புப் பகுதி, ஆகியவற்றில் இருந்து நாரை பிரித்தெடுக்கும் தன்மைக் கொண்டது. 

               இந்த இயந்திரத்தின் விலை ரூ. 40 ஆயிரம். வாழை நாரை பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் 8 முதல் 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 முதல் 20 கிலோ நாரைப் பிரித்து எடுக்கலாம். இந்த இயந்திரத்தை பெண்களும் எளிதில் இயக்கலாம்.  கையினால் நாரைப் பிரித்தெடுப்பதைவிட 40 சதவீதம் அதிக நார், இந்த இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்காது.  

விலை எவ்வளவு? 

            வாழை மட்டை நார் முதல் தரம், டன் ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையிலும், 2-ம் தரம் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரையிலும், வாழைத் தார் காம்பு நார், முதல் தரம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரையிலும், வாழை இலைக் காம்பு நார் மற்றும் வாழை நார் கழிவு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.  வாழை நார் பிரித்தெடுக்கும் தொழிலுக்கு முதலீடு இயந்திரத்துக்கான விலை ரூ. 40 ஆயிரம் மட்டுமே. வேலையாட்கள் 3 பெண்கள் போதும். நாளொன்றுக்கு 15 கிலோ நார் உற்பத்தி எனக் கணக்கிட்டால், அதன் விலை ரூ. 900. ஆள் சம்பளம், மின்சாரம் மற்றும் இயந்திரப் பராமரிப்புச் செலவுகள் நாளொன்றுக்கு ரூ. 345. நிகர வருவாய் நாளொன்றுக்கு ரூ. 655 என்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவிக்கிறது. 

              வாழை நார்களை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பல நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன என்றும் அத்துறையின் தகவல் தெரிவிக்கிறது.  100 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து உழைக்கக்கூடிய ரூபாய் நோட்டுகள் வாழை நாரில் இருந்து தயாரிக்க முடியும் என்று, குஜராத் பல்கலைக்கழகம் கண்டுபிடித்து உள்ளது.  வாழை நாரில் இருந்து உயர்தர காகிதம் தயாரிக்க முடியும், சாதாரண காகிதத்தைவிட வாழைநார் காகிதம் தரத்தில் சிறந்ததாகவும் பல மடங்கு நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது என்றும், அப்பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.  

            வாழை நார் காகிதத்தை 100 ஆண்டுகளுக்கு மேல் கசங்காமல், கிழியாமல் பயன்படுத்த முடியும் என்றும், இயற்கை நார்களிலேயே அதிக வாழ்நாள் கொண்டது வாழைநார், வாழைநாரில் தயாரிக்கும் ரூபாய் நோட்டுகளை 3 ஆயிரம் முறை மடிக்க முடியும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior