கடலூர்:
கடலூர் மாவட்டத் தொட்டில் குழந்தை திட்டத்தை அரசு ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர் முதல் வரவாக பெண் குழந்தை புதன்கிழமை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு பண்ருட்டி அரசு மருத்துவமனையில், இளம்பெண் ஒருவர் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலையில் அப்பெண்ணைக் காணவில்லை. வார்டிலேயே குழந்தையை விட்டு விட்டு அப்பெண் எங்கோ சென்று விட்டார்.
தொடர்ந்து விசாரித்ததில் அப்பெண் போலி முகவரி கொடுத்து மருத்துவ வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப் பெண் திருமணம் ஆகும் முன்பே தவறான உறவில் இக் குழந்தை பிறந்ததாகவோ, முறையாக திருமணம் செய்த பெண் வறுமை காரணமாக குழந்தை வேண்டாம் என்று விட்டுவிட்டுச் சென்றதாகவோ இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இக் குழந்தையை சமூகநலத் துறை அதிகாரிகள் பெற்று வந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் புதன்கிழமை சேர்த்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவே கடந்த ஆண்டுகளில் நடைபெற்று வந்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொட்டில் குழந்தை திட்டத்தை அரசே ஏற்றுநடத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அண்மையில் அறிவித்தார். காரணம் இந்த மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை அரசே ஏற்று நடத்தத் தொடங்கிய பின்னர், முதல் வரவாக, மேற்கண்ட பெண்குழந்தை, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாக மாவட்ட சமூகநலத் துறை அலுவலர் புவனேஸ்வரி தெரிவித்தார். இக்குழந்தை அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் சட்டப்படி, நீதிமன்ற நடைமுறைகளுக்கு உள்பட்டு, குழந்தை இல்லாதோருக்குத் தத்து கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக