கடலூர்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரும் ஜான் டேவிட்டுக்கு, அவரது தந்தை மரணம் காரணமாக 3 நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1996-ம் ஆண்டு, மருத்துவம் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது நாவரசுவை, அதே மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மாணவரான ஜான் டேவிட், கொடூரமாகக் கொலை செய்தார். இக்கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் 11-3-1998 அன்று, ஆயுள் தண்டனை விதித்தது. ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 5 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு பின்னர், அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 20-4-2011 அன்று உச்ச நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு, ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 23-4-2011 அன்று, ஜான் டேவிட் மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஜான் டேவிட்டின் தந்தை மாரிமுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை இறந்தார். தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, பரோலில் செல்ல அனுமதி அளிக்குமாறு ஜான் டேவிட் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை, அவருக்கு 3 நாள் பரோலில் செல்ல அனுமதி அளித்துள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீஸ் காவலர்கள் அடங்கிய பாதுகாப்புடன், ஜான் டேவிட் செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக