
                         கோவை வேளாண் பல்கலைக் கழகம்.
                                              கடலூர்: 
           10-ம் வகுப்பு படித்த உழவர்களும் குறைந்த செலவில் பண்ணை தொழில்நுட்ப  பட்டதாரி (பி.எப்.டெக்.) ஆகும் வாய்ப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம்  தமிழக அரசு வழங்கியுள்ளது. படிப்பின் காலம் 3 ஆண்டுகள்  (6 செமஸ்டர்).  
          இந்தியாவில் ஆண்டுதோறும் வேளாண் வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது. கற்றவர்கள்  விவசாயத்தில் ஆர்வம் காட்டாத நிலையும், பாரம்பரியமாக விவசாயக் குடும்பங்களில்  இருந்து வருபவர்கள் மட்டுமே விவசாயம் செய்யும் நிலையும் நீடித்து வருகிறது. அது  மட்டுமன்றி நமது நாட்டு விவசாயம் பாரம்பரிய முறைகளியே மூழ்கிக் கிடப்பதும், புதிய  புதிய தொழில் நுட்பங்கள் விவசாயத்தில் புகுத்தப்படாமையும், வேளாண் வளர்ச்சிக்  குறைவுக்கு காரணம் என்றும் வேளாண் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தியாவில் விவசாயம்  மீண்டும் செழித்தோங்க, பட்டி தொட்டிகள் எங்கும் வேளாண் கல்வி அறிவு வளர வேண்டும். 
           இதனால், வேளாண் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு, புதிய வேளாண் தொழில்  நுட்பங்கள் தெரிந்து இருந்தால், விவசாயத்தை மேலும் நிறைந்த ஈடுபட்டுடன், லாபகரமாகச்  செய்ய முடியும். விவசாயக் குடும்பத்தைச் சாராதவர்களும் வேளாண் தொழில் நுட்பங்களைக்  கற்றறிந்து, இளைஞர்கள் பலர் புதிதாக வேளாண் தொழிலுக்கு வரலாம், வெற்றிகரமாக  விவசாயத்தை நடத்தலாம். நவீன பண்ணைத் தொழில் நுட்பங்கள் பரவலாக்கப்படுவதன் மூலம்,  வேளாண் வளர்ச்சி பெருகும் வாய்ப்புள்ளது.   10-வது படித்த 27 வயது நிரம்பிய விவசாயி, குறைந்த கட்டணத்தில் வேளாண் பட்டதாரி  ஆகும் வாய்ப்பை பொங்கல் திருநாளில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இளநிலை பண்ணைத்  தொழில் நுட்ப (பி.எப்.டெக்.) கல்வி கற்க விவசாயிகளுக்கு 50 சதம் கட்டணச் சலுகையையும்  தமிழக அரசு அறிவித்துள்ளது. 
         விவசாயிகள் இப் பட்டப் படிப்பை, தமிழ்நாடு வேளாண்  பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் முலம் தொடரலாம் என்று  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.   உலகிலேயே முன்னோடித் திட்டமாக இக்கல்வித் திட்டம் கருதப்படுகிறது. இதில் பயிர்  உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண்  பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறு தொழில்  முனைதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பண்ணை பார்வையிடல் போன்ற தலைப்புகளில்  பாடங்கள் அமைந்து இருக்கும். இப்பட்டப் படிப்பால் உழவர்கள் சுயதொழில் தொடங்கவும்,  தங்கள் வேளாண் தொழிலை அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்ததாகப் பெருக்கிக் கொள்ளவும்  முடியும். 
            விரைவில் இந்த பட்டப் படிப்புக்கான வகுப்புகள் தொடங்க இருக்கின்றன. இந்த 3  ஆண்டு பட்டப்படிப்பு, 6 செமஸ்டர்களை கொண்டது. ஒரு செமஸ்டருக்கான கட்டணம் ரூ. 7,500.  இதில் 50 சதவீத கட்டணச் சலுகையை தமிழக அரசு வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ரூ.  100 கட்டணத்தில் கோவை வேளாண் பல்கலைக் கழகம், தமிழகத்தில் உள்ள 35 வேளாண் ஆய்வு  நிலையங்கள், 11 வேளாண் அறிவியல் நிலையங்கள், மற்றும் 10 வேளாண் கல்லூரிகளில்  கிடைக்கும்.   ஒரு மாவட்டத்தில் 20 மாணவர்கள் சேர்ந்தால்கூட, அருகில் உள்ள வேளாண் ஆய்வு  நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்களில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று, வேளாண்  பல்கலைக்கழக கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் எஸ்.நசீர் அகமது  தெரிவிக்கிறார்.   
மேலும் விவரங்களுக்கு, 
முனைவர் வீ.வள்ளுவ பாரிதாசன், 
இயக்குநர், திறந்த வெளி  மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், 
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்,
 கோவை- 614003 
என்ற முகவரியிலும், 
செல்போன் 94421- 11058, 94421 11048, 94421 11057, 
தொலைபேசி  0422 6611229. என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.  
இணைய தளம்- www.tnau.ac.in 
 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம்  அறிவித்துள்ளது.  


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக