மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பல்வேறு கோயில்களில் இருந்து பல்லக்குகளில் கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு நடந
கடலூர்:
கடலூரில் புதன்கிழமை மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திண்டனர். மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு, மாசிமகம் திருவிழா ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை காலை மாசி மகம் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கடலூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவர்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் மேளதாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எடுத்து வந்தனர். அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரியும் சிறப்பு அலங்காரம், பூஜைகளும் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கடற்கரையில் சிறு சிறு கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு இருந்தன. மாசிமகம் பெüர்ணமியை முன்னிட்டு சில்வர் பீச்சில் ஏராளமானோர் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு பூஜைகளும் நடந்தன.
கடலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாசி மகத்தை முன்னிட்டு திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயில், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான கோயில்களில் இருந்து உற்சவர்கள் இன்று (வியாழக்கிழமை) தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக எடுத்து வருகிறார்கள். மாசி மகம் தீர்த்தவாரிக்காக திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தியின் பல்லக்கு ஊர்வலம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. 40 க்கும் மேற்பட்டோர் பல்லக்கைத் தூக்கி வருகின்றனர். அங்காங்கே மண்டகப் படிகளில் தங்கி வரும் உலகளந்த பெருமாள், புதன்கிழமை திருவந்திபரத்தில் தங்கி உள்ளார். இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரிக்காக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பக்தர்கள் பலக்கில் தூக்கி வருகிறார்கள்.
கடலூர் முதுநகர் உப்பனாற்றில் மாசிமகம் திருவிழா கோலாகலமாக இன்று இரவு 9 மணிக்கு நடக்கிறது. கடற்கரையோரக் கோயில்களில் இருந்து சாமி சிலைகளை மீனவர்கள் எடுத்து வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் வைத்து தீர்த்தவாரியும் சிறப்பு பூஜைகளும் செய்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக