தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,  நுகர்வோர் சட்டம் தொடர்பான புதிய முதுநிலை பட்டயப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்தப் படிப்பில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் சேரலாம். இதன் மூலம்  நுகர்வோர் சட்ட நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்வதோடு, நுகர்வோர் நீதிமன்றத்தில்  தெளிவாக வாதாட முடியும்.  
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வீ. விஜயகுமார் புதன்கிழமை அளித்த  பேட்டி: 
        தங்களின் பிரச்னைகள் குறித்து நீதிமன்றத்தில் நுகர்வோரே வாதாடும் வகையில்  சட்டம் உள்ளது. ஆனால், மக்களிடையே இது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை.  இதனை கருத்தில் கொண்டு, நுகர்வோர் உரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,  சட்ட விதிகளை கற்றுக் கொடுக்கவும் மத்திய அரசின் அனுமதியின் பேரில்  பல்கலைக்கழகத்தில், நுகர்வோர் சட்ட அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 
           இதற்காக  மத்திய அரசின் சார்பாக பல்கலைக்கழகத்துக்கு ரூ. 94.45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகத்தின் பங்காக ரூ. 9.44 லட்சம் வழங்கப்பட உள்ளது.  இந்த அமைப்பின் மூலம் நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடைய  ஏற்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதோடு, அது தொடர்பான முதுநிலை பட்டயப் படிப்பு  ஒன்றும் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் படிப்பு  பல்கலைக்கழகத்தில் முழு நேரமாகவும், தொலைதூரக் கல்வி முறையிலும் வழங்கப்படும்.  
செப்டம்பர் மாதம் முதல்... 
           இந்த பட்டயப் படிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  இது ஒராண்டுப் படிப்பு ஆகும். இதில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.  இந்தப் பட்டயப்படிப்பு அறிமுக விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது.  தமிழக ஆளுநர் கே. ரோசய்யா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றார் விஜயகுமார்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக