பண்ருட்டி, டிச. 16:
பண்ருட்டி வட்டம் எல்.என்.புரம் ஊராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்து தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி நகரின் அருகாமையில் சென்னை சாலையில் எல்.என்.புரம் ஊராட்சி அமைந்துள்ளது. இதில் ஆர்.எஸ். மணி நகர், தேவன் நகர், தர்மேஸ்வரர் நகர், உசேன் நகர், ஷா உசேன் தர்கா நகர், திருமலை நகர், சின்னம்மாள் நகர், கணபதி நகர், ராஜன் நகர் உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட நகர்கள் உள்ளன. பண் ருட்டி நகரின் மிக அருகாமையில் அமைந்துள்ளதால் சுமார் 1500-ம் மேற்பட்ட குடும்பங்கள் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகின்றனர். தாழ்வான பகுதி என்பதாலும், முறையான சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் இல்லாததாலும் மழை காலத்தில் இப்பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வீட்டிற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துவது வழக்கம்.
மழைக் காலத்தில் பாதிக்கப்படும் போது ஒவ்வொரு முறையும் அரசு அதிகாரிகள் பார்வையிடுவதுடன் சரி. மழைக்காலம் முடிந்து தண்ணீர் வற்றிவிட்டால் பின்னர் இதை பற்றி யாரும் கண்டுக்கொள்வதில்லை. தற்போது இடைவிடாது பெய்த கன மழையால் எல்.என்.புரம் ஊராட்சியல் உள்ள மேற்கண்ட நகர் பகுதியில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சுமார் 10-ம் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதில் வசிப்பவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கியுள்ளதால் அப்பகுதியில் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதியில் சாலையின் குறுக்கே பள்ளம் வெட்டி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாலையே தெரியாத அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், குறுக்கே பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளதாலும் பொது மக்கள் நடந்துக் கூட செல்ல முடியாத நிலை வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் அவசரக் காலத்தில் மருத்துவமனைக்கு கூட அப்பகுதி மக்களை வெளிக் கொண்டு வர முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் ஆர்.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.கல்யாணசுந்தரம், எல். ரீட்டா, உதவிப் பொறியாளர் பி.ஆனந்தி ஆகியோர் மழை நீரால் சூழப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். தேங்கிய மழை நீரை வெளியேற்ற சில இடத்தில் சாலைகளின் குறுக்கே வாய்க்கால் வெட்டப்பட்டது.
பின் னர், இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் கூறுகையில், இங்குள்ள மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் நோய் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கையை சுகாதாரத் துறை எடுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக