கடலூர், டிச. 16:
கடலூர் லாரன்ஸ் சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கக் கோரி புதன்கிழமை தொடங்கவிருந்த காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் மேற்கொண்ட முயற்சியால் கைவிடப்பட்டது.
கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்க வேணடும் என்பது கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை. இதில் வணிகர்கள் ஒரு கருத்தையும் வேறு சிலர் மாற்றுக் கருத்துகளையும் தெரிவித்து வருவதால் இத் திட்டம் கிணற்றில் போடப்பட்ட கல்லாக மாறியது. இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகளும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
சுரங்கப் பாதைக்காக கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இறுதியாக பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் புதன்கிழமை காலவரம்பற்ற உண்ணாவிரதம் தொடங்குவதாக அறிவித்தனர். ஆனால், இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல், உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன் திரண்டு வந்தனர். பந்தலும் போடப்பட்டிந்தது.
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை பொதுச் செயலர் நிஜாமுதீன், வெண்புறா பேரவைத் தலைவர் குமார், நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மருதவாணன் மற்றும் பல்வேறு அமைப்புகளச் சேர்ந்த வழக்கறிஞர்கள் திருமார்பன், மன்றவாணன் உள்ளிட்ட பலரும் ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் தொடங்க இருந்தனர். இந்நிலையில், கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் ஆகியோர் போராட்ட ஒருங்கிணைப்பாளர் நிஜாமுதீனைத் தொடர்பு கொண்டு, சுரங்கப் பாதைத் திட்டம் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். எனவே, உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இப்பிரச்னை தொடர்பாக பிற்பகல் 3 மணிக்குப் பேசலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதன்படி மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ரயில்வ உயர் அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் பேசி சுரங்கப்பாதைத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். சுரங்கப்பாதை அமைக்க ஆயத்தப் பணிகள் முடிந்துவிட்டன. கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும். இப்பணியைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ரயில்வே துறை அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியத்ததைத் தொடர்ந்து உணணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக