நெய்வேலி, டிச. 16:
கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் நெய்வேலியில் சுரங்கப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்தின் சார்பில் 3 திறந்தவெளி பழுப்பு நிலக்கரி சுரங்கங்களும், 3 அனல்மின் நிலையங்களும் இயங்கிவருகின்றன.
இந்த அனல்மின் நிலையங்கள் மூலம் 2 ஆயிரத்து 490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் திறந்தவெளி சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி வெட்டமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
சுரங்க இயந்திரங்கள் ஒரு இடத்தை வேறு இடத்திற்கு நகர முடியாத அளவுக்கு சுரங்கத்தினுள் சேறும், சகதியுமாகக் காணப்படுவதால், சிறப்பு சுரங்க இயந்திரங்களின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக, சுரங்கத்தினுள் மழைநீரை சேமிக்க பயன்படுத்தப்படும் சிறு குட்டைகளில், தேங்கியுள்ள நீரை ராட்சத பம்புகளைக் கொண்டு வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனால், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணியும் தடைபட்டுள்ளது. இருப்பினும், பழுப்பு நிலக்கரி சேமிப்புக் கிடங்குகளில் உள்ள பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி அந்தந்த அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக அன்ல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக