கடலூர் :
தமிழகத்தில் தலைநகர் சென்னைக்கு மிக அருகில் உள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்கள் பிளஸ் 2 தேர்வில் சற்று முன்னேறி இருப்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், இம்மாவட்டங்கள் முதலாவது இடத்தை பிடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் விழுப்புரம் மாவட்டம் 72.41 சதவீதம் தேர்ச்சி பெற்று கடைசி இடமான 30வது இடத்தையும், கடலூர் மாவட்டம் 74.46 சதவீம் பெற்று 29வது இடத்தையும் பிடித்தன. இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் 78.79 சதவீதம் தேர்ச்சி பெற்ற 26வது இடத்தையும், விழுப்புரம் மாவட்டம் 76.87 சதவீதம் தேர்ச்சி பெற்று 29வது இடத்தையும் பிடித்துள்ளன. இவ்விரு மாவட்டங்களும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 4 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று சற்று முன்னேறியுள்ளன. கடலூர் மாவட்டம் 26வது இடத்திலும், விழுப்புரம் மாவட்டம் 29,, திருவண்ணாமலை 31, அரியலூர் 32வது இடத்தை பிடித்திருப்பதால் இதை பெரிய மாற்றமாக கருதிவிட முடியாது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து 200 கி.மீ., தொலைவில் உள்ள மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்கள், பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை இன்னும் பின்னோக்கியே உள்ளன. அண்மையில் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கல்வியில் முயற்சி மேற்கொண்டு பின்தங்கிய மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து கடலூரில் பெரியளவில் கூட்டம் நடத்தினார். வரும் ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வடமாவட்டங்கள் அடிப்படை வசதி, பொருளாதாரம், விழிப்புணர்வு, நாகரீகம், கல்விக்கூடம் ஆகியவற்றில் முன்னேறி இருந்தாலும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
பிற தென்மாவட்டங்களான விருதுநகர், ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் எவ்வாறு பணியாற்றுகின்றனர், அவர்களால் மட்டும் எப்படி முதலிடத்தை பிடிக்க முடிகிறது, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் முன்னேற்றம் அடையாததற்கு யார் காரணம் என அரசு கண்டறிய வேண்டும். கல்வியில் கடைசி இடத்தில் உள்ள கடலூர், விழுப்புரம் போன்ற வடமாவட்டங்கள் முதலிடம் பிடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக