லட்சுமி பிரார்த்தனை செய்யுங்க!: வாழ்வின் அடிப்படை தேவை பணம். பணம் இல்லாதவனை அவனுடைய மனைவி கூட விரும்பமாட்டாள் என்பது வள்ளுவர் வாக்கு. பணத்திற்காகவே நாம் நாளெல்லாம் அலைந்து திரிகிறோம். ஆனால், ஒரு சிலருக்கே பணம் சேர்க்கும் பாக்கியம் கிடைக்கிறது. பணத்தையும் பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்லாமல் தேவர்களும் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள். இந்திரன் ஒருசமயம் தன் பதவியை இழந்து அவதியுற்றான். மீண்டும் பதவி பெற பாற்கடலில் கலசங் களை ஸ்தாபித்து விநாயகர், சூரியன், அக்னி, சிவன், திருமால், பார்வதி ஆகியோரை வழிபட்டான். அப்போது அவன் சொன்ன ஸ்லோகங்கள், பிரம்மனுக்கு விஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டதாகும்.
இந்த ஸ்லோகங்களை அட்சயதிரிதியை நன்னாளான இன்று நாமும் வீட்டில் சொன்னால் நிறைந்த செல்வத்தைப் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை. இந்த ஸ்லோகத்தை வாரம்தோறும் வெள்ளிக்கிழமையில் சொல்லிவர செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
* ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவளே! ஆயிரம் நிலவின் பிரகாசத்தைப் போன்ற முகம் கொண்ட தேவியே! இனிமை தருபவளே! உள்ளத்திற்கு உற்சாகம் தருபவளே! தங்கத்தைப் போல ஜொலிப்பவளே! ஒளி மிக்க பொன்னாலான ஆடையை அணிந்திருப்பவளே! பலவகை ஆபரணங்களை அணிந்து தெய்வீகத் தன்மையுடன் திகழும் தாயே! மலர்முகம் கொண்டவளே! மந்தகாசப் புன்னகை சிந்துபவளே! என்றும் மாறாத இளமை கொண்டவளே! உன்னை வணங்குபவர்களுக்கு சகல செல்வவளங்களையும் அள்ளித்தருபவளே! மகாலட்சுமித்தாயே! உன்னை வணங்குகிறேன்.
* சகல உலகங்களிலும் உள்ளவர்களால் போற்றப்படுபவளே! உலக உயிர்களுக் கெல்லாம் மகிழ்ச்சி அளிப்பவளே! ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப் பட்டு அழகிய சிம்மாசனத்தில் வீற்றிருப்பவளே! தாமரை மலரில் நீங்காமல் இருப்பவளே! உனக்குத் தூய்மையான கங்கை நீரை அர்ப்பணிக்கிறேன். மிகப்புனிதமானதும், பாவங்களைப் போக்குவதுமான இக்கங்கைநீரை ஏற்று அருள்வாயாக. கங்கை நீருடன் இந்த பூக்கள், சந்தனம் ஆகியவற்றால் செய்யும் சங்காபிஷேகத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்வாயாக.
* அன்பிற்குரிய ஹரிக்கு மனைவி ஆக திகழ்பவளே! பெருமை மிக்கவளே! அழகூட்டும் நறுமண தைலங்களையும், வாசனைத் திரவியங்களையும் கொண்ட இந்த கங்கை நீரை உனக்கு அர்ப்பணிக்கிறேன். பரந்தாமனின் அன்பிற்குரிய செல்வமகளே! உனக்களிக்கும் நறுமணம் மிக்க சாம்பிராணிப்புகையை ஏற்றுக்கொண்டு அருள்புரிவாயாக.
* அழகிய வடிவம் கொண்டதும், ஒளிமிக்கதும், சகல உயிர்களுக்கும் கண்போன்றதுமான தீபச்சுடரை உனக்கு அர்ப்பணித்து மகிழ்கிறேன். அறுசுவை நிரம்பியதும், உடலுக்கு நலம் தருவதுமான நைவேத்யத்தை அளிக்கிறேன். இதையும் ஏற்றுக் கொண்டு அருள்புரியவேண்டும்.
இந்த வழிபாட்டு வாக்கியங்களைச் சொல்லும்போது அந்தந்த பொருட்களை லட்சுமிதேவிக்கு சமர்ப்பணம் செய்வது நல்லது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக