உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

3-வது நாளாக மழை: வயல்போல் மாறிய கடலூர் சாலைகள்


நாற்று நடவுக்குத் தயாராக இருக்கும் வயல் போல் காட்சி அளிக்கும், திருப்பாப்புலியூர் முத்தையா நகர் விரிவாக்கச் சாலை.
 
கடலூர்:

           கடலூரில் 3-வது நாளாக மழை நீடித்தது. இதனால் பல சாலைகள், உழுது நாற்று நடுவதற்குத் தயாராக இருக்கும் வயல்போல் மாறிவிட்டன. எனவே நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

              தென்மேற்குப் பருவ மழையாகத் தொடங்கி, வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையும் ஏற்பட்டு கடந்த 3 நாள்களாகக் கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து விட்டதாக மூத்த விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனமாக இருந்துவிட்டு, வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைகளை தோண்டத் தொடங்கி இருக்கிறார்கள். 

              தரை மட்டத்தில் இருந்து 5 அடி தோண்டினாலே பலஇடங்களில் நீர் சுரக்கும் கடலூரில், மழைக்காலத்தில் வேலைகளைத் தொடங்கி இருப்பது எத்தகைய ஆபத்து என்பதை பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவோர் புரிந்துகொண்டு இருப்பதாகவே தெரியவில்லை.பல நகராட்சிகளில் எல் அண்ட் டி போன்ற தரமான நிறுவனங்களிடம் பாதாளச் சாக்கடை திட்டப் பணி ஒப்படைக்கப்பட்டு இருக்கும் நிலையில், கடலூரில் அனுபவமற்ற நபர்களிடம் கான்ட்ராக்ட் ஒப்படைக்கப்பட்டு இருப்பதே, கடலூரில் இப்பணி நீண்டுகொண்டே போவதற்குக் காரணம் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

             ற்கெனவே நகராட்சி நிர்வாகம், சாலைகள் அமைக்க நிதியின்றித் தவிக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் சாலைகளைத் தோண்டுவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. 3 நாள்களாகப் பெய்துவரும் மழையால், கடலூர் நகரச் சாலைகள் அனைத்தும் சீர்குலைந்து, நாற்று நடவுக்குத் தயாராக இருக்கும் வயல்கள்போல் மாறி விட்டன.மக்கள் நடந்து செல்வதற்கே லாயக்கற்றதாகச் சாலைகள் மாறிவிட்டன. இரு சக்கர வாகனங்களில் செல்வவோர் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது.  இதுகுறித்து மக்கள் புகார் தெரிவித்தால், நகராட்சி ஆணையரோ, பொறியாளர்களோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

                 நகராட்சித் தலைவரின் முயற்சியால், அவருக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தின்படி, 2 அல்லது 3 லாரிகளில் கேப்பர் மலை சரளைக் கற்களை அடித்து நிரவிவிட்டுச் செல்கிறார்கள் நகராட்சி ஊழியர்கள். அவற்றை ரோலர்கள் மூலம் அழுத்தம் கொடுக்காததால், மழைக்காலத்தில் சாலைகள் மீண்டும் சேறும் சகதியுமாக மாறிவிடுவதுடன், சாலைகளின் உயரம் அதிகமாக உயர்ந்து, வீடுகள் பள்ளத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றன.கடலூர் நகரின் பலபகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து, 2 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் நிலையில், சாலை மட்டத்தை தொடர்ந்து உயர்த்தி வருவதால், மழைக் காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது

இதுகுறித்து நகராட்சித் தலைவர் து.தங்கராசு கூறியது ,

                      50 கி.மீ. நீளச் சாலைகளுக்கு நிதி தருவதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எந்தெந்த சாலைகள் என்று நகராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்து, மன்றக் கூட்டத்தில் வைத்து தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். சாலைகளைச் சீரமைக்க விரைவில் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior