சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.பி.வெங்கட்ரங்கன் (72) திங்கள்கிழமை காலை, சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் காலமானார்.
எல்.பி.வெங்கட்ரங்கன் 20-10-1938 அன்று கடலூரில் பிறந்தவர். அண்ணாருக்கு சித்ரலேகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. மக்கள் தொகையியல், எம்.ஃபில், பிஎச்டி முடித்து அதே பல்கலையில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் மக்கள்தொகையியல் துறைத் தலைவராகவும், 1999-2002 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மைய இயக்குநராகவும், 2002 முதல் 2008 வரை துணைவேந்தராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.
இவர் துணைவேந்தராக இருந்த காலத்தில் பல்கலைக்கழக 75வது ஆண்டு விழா, 93வது அறிவியல் மாநாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. இவ் விழாக்களில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இரங்கல் கூட்டம்:
அண்ணாரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமையில் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், தொலைதூரக்கல்வி மைய இயககுநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.பல்கலை.
விடுமுறை:
வெங்கட்ரங்கனின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக