சிதம்பரம் :
சிதம்பரம் நகர மேற்கு பகுதி மக்களின் முக்கிய வடிகாலான தில்லையம்மன் வாய்க்காலில் ஆகாயத் தாமரை செடிகள் மண்டி தண்ணீர் வடிய முடியாத நிலை உள்ளது.
சிதம்பரம் நகர மேற்கு பகுதி மக்களின் முக்கிய வடிகாலாக தில்லையம்மன் வாய்க்கால் உள்ளது. பாசிமுத்தான் ஓடையில் மொத்த கொள்ளவான 1,800 கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் போது இந்த வாய்க்கால் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது. சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் துவங்கி தில்லையம்மன் நகர், கோவிந்தசாமி நகர் வழியாக பஸ் நிலையம் பின்புறம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. மழைக் காலங்களில் நகரில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் வெள்ள நீர் இந்த வாய்க்கால் மூலமாக வடிகிறது. நகர மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து காக்கும் முக்கிய வடிகாலாக உள்ள தில்லையம்மன் வாய்க்கால் மழைக் காலங்களுக்கு முன்பு ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்படுவதும், தூர்வாரப்படுவதும் வாடிக்கை.
ஆனால் சமீபகாலமாக ஆகாயத் தாமரை செடிகள் அகற்றப்படாததால் வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்கும் போது அவசரத்திற்கு பொக் லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு தண்ணீர் வடிய வைக்கும் நிலையே இருந்து வருகிறது. 54 மீட்டர் அகலமான வாய்க்கால் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்து 20 மீட்டர் அகலமே உள்ளது. போர்க்கால அடிப்படையில் தில்லையம்மன் ஓடை மற்றும் சிதம்பரம் நகரில் தெற்கு பகுதியில் முக்கிய வடிகாலாக உள்ள ஓமகுளம் வடிகால், வெள்ளந்தாங்கியம்மன் கோவில் அருகே செல்லும் வடிகால் ஆகியவற்றை தூர் அகற்றி ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்தினால், வெள்ள காலங்களில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக