தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பி.ஜி.எல். (இளநிலை பொது சட்டப் படிப்பு) பட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் 105-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், முதல் முறையாக பி.ஜி.எல். எனப்படும் இளநிலை பொது சட்டப் படிப்பை விரைவில் அறிமுகப்படுத்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.இந்தப் படிப்பைத் தொடங்க முதல் கட்டமாக பொதுவான சட்டம் சார்ந்த பாடத்திட்டங்களை உருவாக்க நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. இந்தப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டவுடன் கல்விக் குழு மற்றும் ஆட்சி மன்றக் குழு அனுமதி பெற்ற பின் பொது சட்டக் கல்விக்கென தனித் துறை அமைக்கப்படும்.
பல்வேறு சட்டப் பிரிவுகளைச் சார்ந்த சட்டவியல் வல்லுனர்களின் ஆலோசனையுடன் சட்ட கவுன்சிலின் அனுமதியுடன் இந்த பி.ஜி.எல்.- இளநிலை பொது சட்டப் படிப்பு அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் படிப்பில் சேர முடியும்.இப்போது சில பல்கலைக்கழகங்கள் வழங்கும் பிஜிஎல் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றால், சட்டங்கள் குறித்த பொதுவான அறிவை மட்டுமே பெற முடியும்.
ஆனால், தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பிஜிஎல் இளநிலை பொது சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரிடம், ஒரு மாதம் நீதிமன்ற நடைமுறைகள் குறித்து பயிற்சி பெறுவது அவசியம். இதன் பின்னரே பிஜிஎல் பட்டம் பெற இயலும். இதற்கு முறையான அங்கீகாரம் பெற சட்ட கவுன்சிலிடம் அனுமதி பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக