கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், இந்த ஆண்டு வீடு கட்டிக் கொடுப்பதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில் குடிசை வீடுகளுக்குப் பதில் நிலையான வீடுகள் கட்டிக் கொடுக்க, கடலூர் மாவட்டத்தில் 2,10,758 கூரை வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இது முறையாக ஆய்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுக்கத் தகுதியானவை என 1,24,409 குடிசை வீடுகள் தேர்வு செய்யப்பட்டன. இப் பயனாளிகள் பட்டியல் முழுவிவரமும், தேசியத் தகவல் தொடர்பு மையத்தின் சிறப்பு மென்பொருள் மூலம் கணினியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டுக்கு 26,119 பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் கிராம வாரியாக, சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் பெயர் விடுபட்டு இருப்பதாக யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கலாம். விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து இலவசக் கட்டணத் தொலைபேசி எண் 1299 லும் புகார் தெரிவிக்கலாம். ஊரக வளர்ச்சி முகமை அலுவலக தொலைபேசி எண் 04142- 294278, 04142- 294159
ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் இதற்காக ஊராட்சி ஒன்றிய வாரியாக பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக