உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதி இல்லையா?: அன்புமணி ராமதாஸ்

சிதம்பரம்:

          ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் கருணாநிதியால் | 400 கோடி நிதி ஒதுக்க முடியாதது வருந்தத்தக்கது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக பிரமுகரின் திருமண விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியது:

             இளைஞர்கள் சுகாதாரமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியன மேற்கொண்டு மது, புகையிலை, போதை ஆகிய தீயப்பழக்கங்களை தவிர்த்து வாழ வேண்டும். 20 வயது இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை கண்ணெதிரே பார்த்து வருகிறோம். தமிழகத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் குடிப்பழக்கம் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளது. முன்பெல்லாம் ஊருக்கு ஒருவர்தான் குடித்துக் கொண்டிருந்தார். தற்போது ஊருக்கு ஒருவர்தான் குடிக்காதவர் என்ற நிலை உருவாகியுள்ளது.

                   மதுப்பழக்கம் காரணமாகத்தான் 40 சதவீத விபத்துகள் நடைபெறுவதாக ஆய்வு கூறுகிறது. முன்பு அரசு கல்வித்துறையை நடத்தியது. சாராயக்கடையை தனியார் நடத்தி வந்தனர். தற்போது அரசு சாராயக்கடையை நடத்துகிறது. கல்வித்துறையை தனியார் நடத்துகிறது. தமிழக அரசு மருத்துவமனை, மருந்துக் கடைகளை திறப்பதற்கு பதிலாக சாராயக்கடைகளை திறந்து வருகிறது. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு வருவதை முதன்முதலில் எதிர்த்தவர் டாக்டர் ராமதாஸ். அதன் பின்னர்தான் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் குரல் கொடுத்துள்ளனர்.

              நான் மத்திய அமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என அரசாணையை திருத்தி அமைத்தேன்.  வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை திமுக அரசு அளித்ததாகக் கூறுகிறது. 20 சதவீத இடஒதுக்கீட்டை பாட்டாளி மக்கள் கட்சி போராடி வாங்கித் தந்தது என்பதுதான் உண்மை. ஜாதிவாரியாக கணக்கெடுப்புதான் அனைத்து சமுதாயத்தினரையும் முன்னேற்றமடையச் செய்யும். உச்ச நீதிமன்றம் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஓராண்டுக்குள் முடிக்குமாறு கூறியுள்ளது. ஆனால் தமிழக முதல்வர் நிதி இல்லை எனக் கூறுகிறார். தமிழக அரசுக்கு 69 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதில் சமூகநீதிக்காக முதல்வர் கருணாநிதியால் |400 கோடி ஒதுக்க முடியாதது வேதனையைத் தருகிறது என்றார் அன்புமணி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior