உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

3 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தீவிரம்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்



          
               தமிழகத்தில் சிவகங்கை உள்ளிட்ட 3 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

சென்னை அடையாறில் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைத் தொடங்கி வைத்து அமைச்சர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 

                   தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் தலா ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சிவகங்கையில் இப்போது கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பெரம்பலூர், திருவண்ணாமலையிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் விரைவில் அமைக்கப்படும். இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளுக்கு உள்பட்டு, இந்தக் கல்லூரிகளுடன் இணைந்ததாக மருத்துவமனைகளும் அமைக்கப்படும். தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 919 பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசு இதுவரை ரூ. 571 கோடி செலவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 700 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

                  தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா அளவிலான மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 கோடியில் புதிய கட்டங்கள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு இதுவரை ரூ. 600 கோடியில் நவீன கருவிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சுகாதாரத் துறையின் சேவையை மத்திய அரசு பாராட்டி வருகிறது. நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும்  சோளிங்கர் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதே போல தமிழகத்தில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றுகள் வழங்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கை: 

                 தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து வருமுன் காக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட வாரியாக மருத்துவ மற்றும் பொது சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட்டங்கள் தோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேவையான மருந்துகளும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர். இதில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி பவ்தீப் சிங், இயக்குநர் முராரி, மண்டல இயக்குநர் கிரீஷ் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior