கடலூர்:
என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக, மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி இருப்பதாகவும் விரைவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
23-ம் தேதி விருத்தாசலம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நானும், நெய்வேலி ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத் தலைவர்களும் சந்தித்து, என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து விளக்கினோம். உள்துறை அமைச்சர் உடனடியாக, கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார். பொதுத் துறை நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு, தொழிலாளர் நலன், பொதுத் துறை நிறுவனங்களைப் பலப்படுத்துவதில் தொழிலாளர்களின் கடமை, மின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதன் அவசியம், குறித்தும் ப.சிதம்பரம் எடுத்துரைத்தார்.
தில்லி சென்றதும் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுடன் பேசி, பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இது தொடர்பாக 25-10-2010 அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், புதுதில்லியில் இருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
மத்திய நிலக்கரித் துறை அமைச்சருடன் என்.எல்.சி. தொழிலாளர்களின் பிரச்னை குறித்துப் பேசியதாகவும், சுமுகமானத் தீர்வு காண்பதற்கு, ஏற்பாடுகளைச் செய்து இருப்பதாகவும், இச்செய்தியை என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கமாறும் ப.சிதம்பரம் என்னிடம் தெரிவித்தார். எனவே விரைவில் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பில் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக