உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 27, 2010

கடலூரில் இலவச நோட்டுகள் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம்! காலதாமதத்தால் மாணவர்களுக்கு பயனில்லை

சிதம்பரம் : 

               சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து தற்போதுதான் இலவச நோட்டுகள் வழங்கப்படுகிறது. இதுவரை மூன்றில் ஒரு பகுதி பள்ளிக்கு கூட நோட்டுகள் கிடைக்கவில்லை.

                 மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்விக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் முன் னேற வேண்டும் என முழு வீச்சில் செயல்படுகிறது. இதற்காக மதிய உணவு, மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், பஸ் பாஸ், சைக்கிள்கள் என வரிசையாக பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முறையாக பயன்படாமல் சம்பந் தப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சென்றடையாமல் வீணடிக்கப்படுகிறது.

                    ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் பொது பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச நோட்டுகள் வழங்கி வருகிறது. 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஐந்து ரூல்டு நோட்டு, இரண்டு அன்ரூல்டு நோட்டு, 6ம் வகுப்பு முதல் 8 வரை நான்கு ரூல்டு நோட்டும், ஒரு கணிதம் நோட்டு, ஒரு அன்ரூல்டு நோட்டு, இரண்டு பெரிய நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

                  இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளி திறந்தது முதல் ஆதிதிராவிட நலத்துறை மூலம் முன்னுரிமை அடிப்படையில் முதலில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளுக்கும், அதன் பிறகு பொது பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் இலவச நோட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் ஜூன் மாதம் பள்ளி துவங்கியதும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் பொதுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப் படாமல், காலம் தாழ்த்தி காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் தற்போதுதான் நோட்டுகள் வழங் கும் பணி துவங்கியுள்ளது.

                     சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளுக்குக் கூட இதுவரை நோட்டுகள் சரியாக சென்று சேரவில்லை. பெரும்பாலான பொது பள்ளிகளில் ஆதிதிராவிட மாணவர்கள் எண்ணிக்கை குறித்து விவரங்கள் கூட தற்போதுதான் கேட்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் முழுமையாக வினியோகிக்க எப்படியும் இன்னும் ஒருமாத காலம் ஆகும். பயன்கள் ஏழை, எளியோருக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் திட்டங்களை உருவாக்கினாலும் அதனை மக்களிடையே கொண்டு செல்வது அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது. அவர்களின் அலட்சியத்தால் தற்போது வழங்கப்படும் நோட்டுகளால் எந்த பயனும் இல்லை. இனி வரும் காலங்களிலாவது உரிய நேரத்தில் உதவிகள் சென்றடைய அதிகாரிகள் பாடுபட வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior