உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 19, 2010

6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் இலவச தடுப்பூசி



   
                   பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள சென்னை, வேலூர், கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் ஓரிரு நாளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்தை இலவசமாகப் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  
 
                 தென் மேற்குப் பருவமழை காரணமாக கடந்த மாதம் சென்னை, வேலூர், கடலூர், கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது.  அரசு மருத்துவமனைகளில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். எச்1என்1 வைரஸ் மூலம் பரவும் பன்றிக் காய்ச்சல் காரணமாக மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். 
 
 தடுப்பூசி மருந்து: 
 
                   சென்னை கிங் ஆய்வு மையம், சென்னை மாநகராட்சி பரிசோதனைக் கூடங்களில் கட்டண அடிப்படையில் தடுப்பூசி மருந்து போடும் பணி தொடங்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். 
  
யாருக்கு இலவசம்? 
 
                  கலைஞர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வைத்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சொட்டு மருந்து (மூக்கில் விடுதல்) அல்லது தடுப்பூசி மருந்தை இலவசமாகப் போட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சொட்டு மருந்து, தடுப்பூசி மருந்தை மருந்து நிறுவனங்களிடமிருந்து பெற ரூ.15 கோடியை அரசு ஒதுக்கியது.  டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்து, சென்னை உள்பட மேலே குறிப்பிட்ட 6 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு ஓரிரு நாளில் தடுப்பூசி மருந்து விநியோகம் நடைபெறும் என்று அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
 ஓர் ஆண்டுவரை நோய் தடுப்பு சக்தி: 
 
              பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தின் ஆற்றல் ஓர் ஆண்டு வரை நீடித்து, உடலுக்கு நோய் தடுப்புச் சக்தியை அளிக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.  
 
அறிகுறிகள் என்ன? 
 
                பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னை, கோவை உள்பட அரசு மருத்துவமனைகளின் தனி சிகிச்சைப் பிரிவுகளில் ஒரு சிலர் மட்டுமே இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருமல்-சளியுடன் வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும்.  
 
                            இந்த அறிகுறிகள் தொடரும் நிலையில், தாமதிக்காமல் பன்றிக் காய்ச்சலுக்கு உரிய தொண்டைச் சளி பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.  ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. ஆரம்ப அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை பெற்றால், உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior