கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.3 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
நெல் பயிரைப் பொறுத்தவரை, சொர்ணவாரி பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 11,974 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. குறுவைப் பருவத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 8326 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. சம்பா பருவத்தில் 2.3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் முடிய 38,153 ஹெக்டேரில் நடு முடிந்துள்ளது. செப்டம்பர் முடிய கரும்பு 33,642 ஹெக்டேர், கம்பு 2715 ஹெக்டேர், கேழ்வரகு 4459 ஹெக்டேர், மக்காச்சோளம் 12464 ஹெக்டேர், உளுந்து 945 ஹெக்டேர், மணிலா 3718 ஹெக்டேர் எள் 3446 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரியில் 44.9 அடி (மொத்த உயரம் 47.5அடி),கீழணையில் 7 அடி (9 அடி). வாலாஜா ஏரியில் 5.5 அடி (5.5 அடி), பெருமாள் ஏரியில் 5 அடி (6.5 அடி) உள்ளது. வெலிங்டன் ஏரியில் தண்ணீர் இல்லை. விதைகளைப் பொறுத்தரை நெல் 498.38 டன்கள், தானிய வகைகள் 0.75 டன்கள், பயறுவகைகள் 72.73 டன்கள், மணிலா 5.32 டன்கள் இருப்பு உள்ளது. உரங்கள் தழைச்சத்து 904 டன்கள், மணிச்சத்து 1212 டன்கள், சாம்பல் சத்து 1970 டன்கள் இருப்பு உள்ளது.
உயிர் உரங்கள் 1,05,650 பொட்டலங்கள் இருப்பு உள்ளன. 2,28,200 பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளன. கூட்டுறவு மூலம் செப்டம்பர் முடிய பயிர்க்கடன் குறுகிய காலக் கடன்கள் 107.99 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய காலக் கடன் 4.86 கோடி, இதர வேளாண் கடன்கள் 364.07 கோடி (மொத்தம் | 476.92 கோடி) வழங்கப்பட்டு உள்ளது என்றார் ஆட்சியர்.
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்:
வாலாஜா ஏரி மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு என்.எல்.சி. 24 கோடி ஒதுக்கி இருக்கிறது. விரைவில் பணியைத் தொடங்க முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். வடகிழக்குப் பருவமழை காலத்தில் வீராணம் ஏரியில் 43 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. வீராணம் ஏரிக்கு லஸ்கர்களை நியமித்து, நீர் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
பெண்ணாடம் சோமசுந்தரம்:
பெண்ணாடம் சர்க்கரை ஆலை கரும்பு நடவுக்கு ஏக்கருக்கு | 3 ஆயிரம் மானியம் வழங்குவதாக அறிவித்து, இதுவரை வழங்கவில்லை.
மாவட்ட ஆட்சியர்:
வேளாண் உதவி இயக்குநர் முன்னிலையில், சர்க்கரை ஆலை விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும்.
முட்லூர் விஜயகுமார்:
டெல்டா பாசனப் பகுதிகளுக்கு கூடுதல் நீர் வழங்கியதற்கு நன்றி. நுண்ணுயிர் உரத்தின் விலையைக் குறைக்க வேண்டும்.
வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன்:
வீராணம் ஏரியில் நீர் மட்டத்தை 43 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது. களங்கள் இல்லாத இடங்களில், அறுவடை காலங்களில் சாலைகளில் தானியங்களை உலர்த்த அனுமதிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்:
தேவைப்படும் அனைத்து இடங்களிலும் களங்கள் அமைக்க நிதி வழங்கப்படும். விவசாயிகள் தெரிவிக்கலாம்.
வேணுகோபால்:
மக்காச்சோளத்துக்கு களை எடுக்க தகுந்த கோனோவீடர் கருவிகள் வேண்டும்.
மருத்தாசலம்:
வெலிங்டன் ஏரிக்கு கூடுதல் நீர் வரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக